×

போலீஸ் அதிகாரியை தாக்கிய ரவுடியை அமைச்சர் சந்திப்பதா?: ஐகோர்ட் நீதிபதி கண்டனம்

சென்னை: போலீஸ் அதிகாரியைத் தாக்கிய ரவுடியை மருத்துவமனையில் அமைச்சர் சந்திப்பதா என்று ஐகோர்ட் நீதிபதி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மன அழுத்தம் மற்றும் பணிச்சுமையால் போலீசார் தற்கொலை செய்வதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு  விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘டிஜிபி பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போலீசாரின் தற்கொலை தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேவையில்லை. இது குறித்து விரிவாக வாதிட  உள்ளேன்’’ என்றார்.அப்பொழுது, வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘‘உயரதிகாரிகள் வாகனத்தில் செல்லும்போது அவர்கள் சீருடை அணிவதில்லை. ஆனால்,  அவர்களுக்கு சீருடை அணிந்த போலீசாரின் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. சீருடை அணியாமல் இருக்கும் அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை.  அவர்களுக்குத் தரும் பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, ‘‘அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தரப்படுவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. உரிய பாதுகாப்பு இல்லாததால்தான் மத்திய  பிரதேசத்தில் மணல் மாபியாக்களால் போலீஸ் உயர் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்’’ என்றார்.அப்போது வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி, ‘‘அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை போலீசாருக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்’’ என்றார்.  அதற்கு நீதிபதி, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தை இலவசமாகக் கொடுப்பது இருக்கட்டும், முதற்கட்டமாக குழந்தைகளுக்கு தேவையான சத்தான  உணவை வழங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை’’ என்றார்.இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக  காவல் துறையோ அல்லது வக்கீல்களோ எந்த புகாரையும் தரவில்லை. அப்படி ேமடைகளிலும், விவாதங்களிலும் பேசுபவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படாதது வெட்கக்கேடானது.காவல்துறையில் இருப்பவர்கள் காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆடர்லி முறை ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில்  கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஆடர்லிகள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ராமநாதபுரத்தில் ஒரு  போலீஸ் எஸ்ஐயை ஒரு ரவுடி தாக்கியுள்ளார். அந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை அமைச்சர் ஒருவர் (மணிகண்டன்)  நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதுபோன்ற செய்திகளும் வெளிவந்துள்ளன.

போலீசாரும் நமது சகோதரர்கள் தான் என்பதை அனைவரும் உணரவேண்டும். ரவுடியால் தாக்கப்பட்ட போலீஸ்காரருக்கு நாம் ஆறுதல் கூறவில்லை.  குற்றவாளி ஒருவரை போலீசார் தாக்கினால் அது மனித உரிமை மீறல் என்று புகார்களை அனுப்புகிறோம். ஆனால், ஒரு ரவுடியால் போலீஸ் அதிகாரி  ஒருவர் தாக்கப்படும்போது மனித உரிமை குரல் எழுப்பப்படுவதில்லை. போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படும்போது மனித உரிமை ஆர்வலர்கள் இந்த  விஷயத்தில் எங்கே சென்றார்கள்.போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் பாதுகாப்புக்காக போலீசார் நியமிக்கப்படுவது தவறில்லை. ஆனால், வீடுகளில் உள்ள வேலைகள் குறிப்பாக  துணிகளைத் துவைப்பது, நாய்களை நடைப்பயிற்சிக்கு கூட்டிச் செல்வது போன்ற பணிகளைச் செய்யச் சொல்வது ஏற்கத்தக்கதல்ல. இன்றளவும் இது  நடந்து வருகிறது.

அதிகாரிகளுக்கு பணியாற்ற வேண்டுமானால் உதவியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். பணியாளர்களுக்கான சம்பளத்தை அரசு தரலாம். அதை  விட்டுவிட்டு அனைத்து போலீஸ் பயிற்சிகளையும் முடித்துவிட்டு சீருடையில் உள்ளவர்களை ஆடர்லிகளாக எப்படி பயன்படுத்த அனுமதிக்கலாம். இது  மிகவும் கண்டிக்கத்தத்தது.இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 26க்குத் தள்ளிவைத்தார். தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  மணிகண்டன்தான், ராமநாதபுரத்தில், எஸ்.ஐ.யை தாக்கிய ரவுடியை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, காயமடைந்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவத்தைத்தான் நீதிபதி நீதிமன்றத்தில் கண்டித்துள்ளார்.  இது போலீசாரிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...