×

சத்தியமங்கலம் அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்த 3 காட்டு யானை மீட்பு

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலத்தில், 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகளை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கானக்குந்தூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 காட்டுயானைகள் ஒரு தோட்டத்தில் நுழைந்தது. கிணறு இருப்பது தெரியாமல் அங்கிருந்த 50 அடி அழ கிணற்றில் 3 யானைகளும் தவறி விழுந்தன. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் யானைகள் தண்ணீரில் தத்தளித்தன.

கிணற்றில் யானைகள் விழுந்துகிடப்பதைக் கண்ட பொதுமக்கள், நேற்று காலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து யானைகள் கிணற்றிலிருந்து மேலே ஏறுவதற்கு ஏதுவாக மண்ணை சாய்வுதளம்போல் அமைத்து பாதை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றிலிருந்து மேலே ஏறி வனப்பகுதிக்குள் சென்றன. குட்டியானை ஒன்று கிணற்றிலிருந்து ஏறுவதற்கு முயற்சித்தபோது தாய்யானை ஏறுவதற்கு உதவியது. 2 மணி நேரம் போராடி யானைகள் மீட்கப்பட்டது.

வீடுகளுக்குள் புகுந்த குட்டி யானை தாய், மகன் காயம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பெரிய சூண்டி முருகன் கோவில் பகுதியில் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் இப்பகுதிக்கு குட்டியுடன் வந்த நான்கு காட்டு யானைகள் நடமாடிக் கொண்டிருந்தன. இவற்றில், குட்டி யானை மட்டும் சத்தியசீலன் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தமிழ்செல்வி, மகன் கவுதம் ஆகியோரை தாக்கியது. இதில் தாயும், மகனும் காயமடைந்தனர். சத்தியசீலன் காயமின்றி தப்பினார்.

அவர் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் இருந்த சிவக்குமாரின் வீட்டுக்குள் நுழைந்தது. உடனே, வீட்டில் இருந்தவர்கள் மற்றொரு அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டனர். பின்னர், ராமையாவின் வீட்டுக்குள் புகுந்தது. சப்தம் கேட்டு அவர்கள் யானையை விரட்டி உயிர் தப்பினர். 3 குடும்பங்களின் அலறல் சப்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் தீப்பந்தம் காட்டி யானையை வனத்திற்குள் விரட்டினர். பிறகு, காயமடைந்த தமிழ்செல்வி, கவுதம் ஆகியோரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது