×

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க நிதி இல்லை பெட்ரோல், டீசல் மீதான வரி ஜிஎஸ்டியில் வந்தாலும் குறையாது: அதிகாரிகள் பகீர் தகவல்

 புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரி ஜிஎஸ்டிக்குள் வந்தாலும் குறைய வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.  கர்நாடக தேர்தலுக்காக விலை உயர்வை நிறுத்தி வைத்த எண்ணெய் நிறுவனங்கள், அதன்பிறகு லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் வரை உயர்த்தின. பின்னர்  விலையை குறைத்தாலும், உயர்த்திய வேகத்துக்கு சரியவில்லை. நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 79.16க்கும் டெல்லியில் 76.27க்கும் விற்கப்பட்டது. டீசல் சென்னையில் நேற்று 71.54 ஆகவும்,  டெல்லியில் 67.78 ஆகவும் இருந்தது. கடந்த 10 நாட்களில் 4 முறை மட்டுமே விலையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றை  ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரியும், மாநிலங்கள் வாட் வரியும் விதித்து வருகின்றன. பெட்ரோல் மீது லிட்டருக்கு 19.48ம், டீசல்  மீது 15.33 மத்திய அரசு வசூலித்து வருகிறது. இதை குறைக்க மத்திய அரசு உடன்படவில்லை. இதுதவிர வாட் வரி மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இதையும் சேர்த்தால் பெட்ரோலுக்கு 45% முதல் 50% , டீசலுக்கு 35 % முதல் 40% வரி  விதிப்பு இருக்கிறது. ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி 28 சதவீதம்தான். இதனால்தான் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என எதிர்பார்க்கின்றனர். ஜிஎஸ்டியில்  28 சதவீதத்துக்கு மேல் வரி இருந்தவற்றுக்கு, அந்த வித்தியாசம் செஸ் வரி மூலம் ஈடுகட்டப்பட்டுள்ளது.  

 பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டியின் உச்சபட்ச அளவான 28 சதவீதம் மட்டும் விதித்தால் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் பெரிய அளவில்  வருவாய் இழப்பு ஏற்படும். அதோடு, மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டி வரும். இதற்கு மத்திய அரசிடம் போதுமான நிதி இல்லை. எனவே, வாட் வரியையும் சேர்த்து சராசரியாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யும்போது தற்போதைய வரி விதிப்பில் மிகக்குறைந்த அளவே மாற்றம்  இருக்கலாம்.
 தற்போதைய வரியை விட அதிகாரிக்காது என்பதை மட்டுமே உறுதியாக கூற முடியும். மாநிலங்கள்தான் வரியை குறைக்க வேண்டும் என மத்திய  அரசு வலியுறுத்திய வண்ணம் இருக்கிறது. எனவே, ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தால் மட்டுமே விலை அதிரடியாக குறைய வாய்ப்புகள் உள்ளன. இது  மாநிலங்களுடன் இணைந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. எனவே, இதுபற்றி இப்போதைக்கு உறுதியாக கூறமுடியாது என்றனர்.

* கலால் வரியாக, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.48ம், டீசலுக்கு 15.33 ம் மத்திய அரசு வசூலிக்கிறது.
* பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, ஜெட் எரிபொருள், கச்சா எண்ணெய் ஆகியவற்றில் இருந்து இன்புட் வரி கிரெடிட்டாக மத்திய அரசுக்கு  ஆண்டுக்கு ₹20,000 கோடி வருகிறது. இதை இழக்க தயாரானால்தான் ஜிஎஸ்டியில் வரி குறையும்.
* வாட் வரி அந்தமான் நிகோபாரில் மிகக்குறைந்த அளவாக பெட்ரோல், டீசல் 6 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெட்ரோலுக்கு  அதிகபட்சமாக 39.12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு தெலங்கானாவில் அதிகபட்ச அளவாக 26 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் பெட்ரோலுக்கு 34 சதவீதம், டீசலுக்கு 25 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.!...