×

மகாராஷ்டிரா வங்கியில் 3,000 கோடி மோசடி: 4 அதிகாரிகள் கைது

புனே: 3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான  ரவீந்திர மாத்ரே உள்ளிட்ட 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். புனேயை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டி.எஸ்.கே. டெவலப்பர்ஸ் லிமிடெட். இதன் உரிமையாளர் டி.எஸ்.குல்கர்னி. இவரது நிறுவனம் 4,000  முதலீட்டார்களிடம் 1,154 கோடி மோசடி செய்ததாகவும் வங்கிகளில் 2,892 கோடி கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி  செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் டி.எஸ்.குல்கர்னி மற்றும் அவரது மனைவி ஹேமாந்தி  ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில், டி.எஸ்.குல்கர்னியின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் 3,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது  அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கியின் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி  டி.எஸ்.கே. குழும நிறுவனத்துக்கு ₹3,000 கோடி கடன் கொடுத்துள்ளனர். இந்த தொகையை டி.எஸ்.கே. குழும நிறுவனம் இதுவரை திருப்பி  செலுத்தவில்லை. டி.எஸ்.கே.குழும நிறுவன அதிகாரிகளுடன் பாங்க் ஆப் மகாராஷ்டிரா அதிகாரிகள் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக புனே  மாவட்ட அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான  ரவீந்திர மாத்ரே, வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.கே.குப்தா ஆகியோரை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வங்கியின்  முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் சுஷில் முனோட் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் தவிர டி.எஸ்.கே. குழுமத்தின் தணிக்கையாளர் சுனில் கட்பாண்டே, அந்த நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவு துணைத் தலைவர் ராஜிவ்  நவாஸ்கர், பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் புனே மண்டல மேலாளர் நித்யானந்த் தேஷ்பாண்டே ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது  செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மோசடி, கிரிமினல் சதி, நம்பிக்கைத் துரோகம் செய்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம், டி.எஸ்.கே. குழுமம் மற்றும் அதன் உரிமையாளர் குல்கர்னிக்கு சொந்தமான 124 சொத்துக்கள், 46 வாகனங்களை பறிமுதல் செய்யவும்,  276 வங்கி கணக்குகளை முடக்கவும் மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு