×

80,000 போலி நிறுவனங்கள் மாற்றிய கருப்புப் பணம் கண்டுபிடிப்பதில் புது சிக்கல்

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு போலி நிறுவனங்கள் வங்கிகளில் மாற்றிய கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பை கண்டறியும் விசாரணைக்கு  முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பான் எண் இல்லாமல் பரிவர்த்தனை செய்ததால் இவற்றை கண்டறிய முடியாமல் வங்கிகள் திணறுகின்றன. கருப்புப் பணத்தை மீட்கவும் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கவும், பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.  இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில், வங்கிகளில் அதிகமாக மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்கள் கண்காணிக்கப்பட்டன. அப்போது, போலி நிறுவனங்கள் தங்கள்  கணக்கில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்து மாற்றியது அம்பலமானது. வர்த்தக ரீதியாக செயல்படாத இந்த நிறுவனங்கள், வரி ஏய்ப்பு மற்றும்  கருப்புப்பண பரிமாற்றத்துக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

 இதை தொடர்ந்து, முதல் கட்டமாக 2.26 லட்சம் நிறுவனங்கள் கம்பெனி பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக 2.25 லட்சம்  நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டன. இவற்றின் பரிவர்த்தனை விவரங்களை அளிக்க வங்கிகளுக்கு  உத்தரவிடப்பட்டது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும், வங்கிகள் இந்த பட்டியலை சமர்ப்பிக்கவில்லை. இதனால் விசாரணையில் தொய்வு  ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து கம்பெனி விவகார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு போலி நிறுவனங்கள் தங்கள் வங்கி கணக்கில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்து மாற்றியுள்ளன. இந்த விவரங்களை  ஒப்படைக்குமாறு வங்கிகளிடம் கேட்டிருந்தோம். முதல் கட்டமாக சில நிறுவனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. தற்போது 73,000 நிறுவனங்களின் டெபாசிட் விவரங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இவை பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு ₹24,000 கோடியை  இந்த நிறுவனங்கள் மாற்றியுள்ளன. 80,000 நிறுவனங்களின் பரிவர்த்தனை விவரங்கள் கிடைக்கவில்லை.

 இவற்றில் ஏராளமான நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளன. ஆனால், கம்பெனி பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டதால், இந்த  நிறுவனங்களிடம் இருந்து வரி பாக்கியை வசூல் செய்ய முடியாது. எனவே, வரி பாக்கியை வசூல் செய்ய இந்த நிறுவனங்கள் இயங்க மீண்டும் அனுமதிக்க வேண்டும் என வருமான வரித்துறை கம்பெனி பதிவாளருக்கு  கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, மத்திய நேரடி வரிகள் ஆணையமும் வருமான வரி  முதன்மை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், 80,000 நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாததற்கு அவற்றின் பான் எண் இல்லாததுதான் காரணம் என  வங்கிகள் தெரிவித்துள்ளன. ₹50,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் பான் எண் கட்டாயம் தேவை. ஆனால், பான் எண் இல்லாமலேயே இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதனால், பண பரிமாற்றத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  வங்கிகள் கைவிரித்து விட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 2.26 லட்சம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், கணக்கு தாக்கல் செய்யாத மேலும்  2.26 லட்சம் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மொத்தம் 11 லட்சம் நிறுவனங்கள், கம்பெனி பதிவாளரிடம் பதிவு செய்துள்ளன. இவற்றில் 5 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே இயங்குகின்றன என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு  பண பரிமாற்றம் செய்த நிறுவனங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், பான் எண் இல்லாததால் பரிவர்த்தனை  கண்டுபிடிக்க முடியாதது விசாரணையில் தொய்வை மட்டுமின்றி, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

*  தீவிர விசாரணையில் 73,000 நிறுவனங்களின் பண பரிவர்த்தனை மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இவை பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு ₹24,000  கோடியை டெபாசிட் செய்து மாற்றியுள்ளன.
*  மொத்தம் 11 லட்சம் நிறுவனங்கள் கம்பெனி பதிவேட்டில் உள்ளன. இதில் 5 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே முறையாக இயங்குகின்றன.
*  பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு முதல் கட்டமாக 2.26 லட்சம் போலி நிறுவனங்கள் கம்பெனிகள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டன. அடுத்ததாக,  மேலும் 2.25 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மார்ச்-29: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!