×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 420 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்: 3வது நாளாக பணி தீவிரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று வரை 20 டேங்கர் லாரிகளில் சுமார் 420 மெட்ரிக் டன் கந்தக அமிலம்  அகற்றி வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது.தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில்  உள்ள ஒரு குடோனில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. நிபுணர்கள் குழு ஆய்வில் கந்தக அமில டேங்க்கில் கசிவு ஏற்பட்டது  தெரியவந்ததால் அதனை உடனடியாக சரி செய்யவும் அங்கிருந்த 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை அகற்றவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். 18ம் தேதியே இதற்கான பணி துவங்கிய நிலையில் அங்கு தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று  முன்தினம் 4 லாரிகளில் கந்தக அமிலம் கொண்டு செல்லப்பட்டது.

 இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்தது. அமிலத்தை கொண்டு செல்ல 11  டேங்கர் லாரிகள் ஆலையின் உள்ளே தயார் நிலையில் இருந்தன. தொடர்ந்து டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றப்பட்டு வெளியிடங்களுக்கு  அனுப்பும் பணி நடந்தது. மாலையில் 5 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு லாரியில் 21 மெட்ரிக் டன் வீதம் இதுவரை மொத்தம் 20 லாரிகளில் 420 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியூர் ஆலைகளுக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணி மேலும் இரு நாட்கள் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு 30ம் நாள் அஞ்சலிதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான 30வது நாளையொட்டி, தூத்துக்குடி முக்கிய தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலிகள் நடந்தன.  பலியானவர்களின் சிலரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மவுன ஊர்வலமாக கல்லறைக்கு சென்று மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினர். தூத்துக்குடி வர்த்தகர்கள் சங்கம், இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒருநபர் விசாரணை கமிஷனுக்கு தடைகோரி மனு
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் அர்ஜூனன் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டத்தின்போது, விதிகளை பின்பற்றாமல் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13  பேர் பலியாகினர். இதுதொடர்பாக விதிகளை பின்பற்றாமல் அவசர கதியில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை  ஆணையத்தை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்ததில் விதிகள் பின்பற்றப்படவில்லை.  விசாரணை நடைமுறையிலும் விதிகளை பின்பற்றவில்லை. இந்த ஆணையம் முறையாக விசாரணை நடத்தும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது.  எனவே, ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்த அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மின் இணைப்பு தரவேண்டுமா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பொது மேலாளர் சத்யப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பாதுகாப்பான முறையில் அமில  கசிவை அகற்ற மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல்  செல்லப்பாண்டியன் ஆஜராகி, கடந்த 3 நாட்களாக அமில கசிவை அகற்றும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, மின் இணைப்பு வழங்க  வேண்டியது அவசியமா என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்க  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 25க்கு தள்ளி வைத்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...