×

புழல் சிறையில் பிரபல ரவுடி கழுத்தை அறுத்து படுகொலை: சக கைதிகள் 5 பேர் கைது, 2 கத்திகள் பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் கழுத்தை அறுத்து பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக கைதிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சாமந்திப்பூ காலனியை சேர்ந்தவர் முரளி என்கிற பாக்சர் முரளி (31). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். முரளி மீது எம்.கே.பி நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், மாதவரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை, கொலை முயற்சி உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் எம்கேபி நகர் போலீசார் பாக்சர் முரளியை கடந்த மே மாதம் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  

நேற்று காலை 10 மணியளவில் பாக்சர் முரளி சிறையில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளான வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியை சேர்ந்த கார்த்திக் (30), சரண்ராஜ் (30), செம்மஞ்சேரி ஜோயல் (26), கொடுங்கையூர் வாத்து என்ற பிரதீப் (20), ரமேஷ் (22) ஆகிய 5 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாக்சர் முரளியின் கழுத்து மற்றும் மர்ம உறுப்பை அறுத்தனர். மேலும், பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாக்சர் முரளி வலிதாங்க முடியாமல் அலறியபடி, ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற கைதிகள் பீதியில், நாலாப்புறமும் ஓடினர்.

தகவலறிந்து சிறைக்காவலர்கள், புழல் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாக்சர் முரளியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்சர் முரளி பரிதாபமாக இறந்தார். விசாரணையில் சிறையிலுள்ள கைதி சரண்ராஜின் நண்பர்  சாலமோனை வெட்டிய விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக முரளியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

வியாசர்பாடியில் போலீஸ் குவிப்பு
ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில், பாக்சர் முரளியின் மனைவி ஈஸ்வரி மற்றும் குழந்தைகள் கதறி அழுதபடி இருந்தனர். முரளியின் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அவரது ஆதரவாளர்கள் எந்த அசம்பாவித சம்பவத்திலும் ஈடுபடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறைத்துறை இயக்குநர் ஆய்வு
புழல் சிறையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சிறைத்துறை இயக்குநர் அசுதோஸ் சுக்லா, சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மற்ற கைதிகளிடம் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பொன்னேரி குற்றவியல் மாஜிஸ்திரேட்  சதீஷ்குமார் நேற்று இரவு 8.30 மணி அளவில் புழல் சிறைக்கு வந்து, கொலை குறித்து மற்ற கைதிகளிடம் விசாரணை நடத்தினார்.இதே புழல் சிறையில், சென்னையை கலக்கிய பிரபல ரவுடி வெல்டிங் குமார் கடந்த 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை