×

தொடர்ச்சியாக 2வது வெற்றி எகிப்துக்கு எதிராக ரஷ்யா ரகளை : ஆறுதல் கோல் போட்டார் சாலா

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரஷ்ய அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் நேரடியாகத் தகுதி பெற்றிருந்த ரஷ்ய அணி, தொடக்கத்தில் கடுமையான விமர்சனங்கள், கேலி, கிண்டலை எதிர்கொண்டது. ஆனால், தொடக்க லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய ரஷ்ய வீரர்கள், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில், ரஷ்யா தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த எகிப்து அணியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே தற்காப்பு வியூகத்தில் கவனமாக இருந்ததால் கோல் ஏதும் விழாமல் சமநிலை நீடித்தது. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில், முழு உத்வேகத்துடன் தீவிரமாகத் தாக்குதல் நடத்திய ரஷ்ய வீரர்கள் எகிப்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

47வது நிமிடத்தில் எகிப்து கேப்டன் அகமது ஃபாதி பந்தை தடுக்க முயன்றபோது, அவரது காலில் பட்டு தெறித்த பந்து வலைக்குள் தஞ்சமடைந்து சுய கோலாக அமைந்துவிட்டது. எதிர்பாராத இந்த கோலால் 1-0 என முன்னிலை பெற்ற ரஷ்ய அணி, கூடுதல் உற்சாகத்துடன் தாக்குதலை அதிகரித்தது. இதன் பலனாக 59வது நிமிடத்தில் டெனிஸ் செரிஷேவ், 62வது நிமிடத்தில் அர்டெம் ஸியூபா அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.கடைசி கட்டத்தில் எகிப்து வீரர்கள் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர். சாலாவுக்கு எதிராக ரஷ்ய வீரர் தவறு செய்ததைத் தொடர்ந்து எகிப்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி 73வது நிமிடத்தில் முகமது சாலா கோல் அடித்தார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாத நிலையில், ஆட்ட நேர முடிவில் ரஷ்ய அணி 3-1 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தி ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த அணியின் டெனிஸ் செரிஷேவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் லீக் ஆட்டத்திலும் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

* உலக தரவரிசையில் 70வது இடத்தில் உள்ள ரஷ்ய அணி, நடப்பு உலக கோப்பை தொடரில் களமிறங்கியுள்ள அணிகளின் ரேங்க் அடிப்படையில் மிகவும் பின் தங்கியுள்ளது.  
* 1996ல் சோவியத் யூனியன் அணியாகக் களமிறங்கியபோது அரை இறுதிக்கு முன்னேறி இருந்த ரஷ்ய அணி, அதன் பிறகு தற்போது தான் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
* முதல் 2 போட்டியில் 8 கோல் அடித்துள்ள ரஷ்யா, இந்த வகையில் போட்டியை நடத்தும் நாட்டுக்கான அதிகபட்ச கோல் சாதனையை சமன் செய்துள்ளது. முன்னதாக 1934ல் இத்தாலி அணி முதல் 2 போட்டியில் 8 கோல் அடித்துள்ளது.
* 2002, 2014 உலக கோப்பை தொடர்களில் மொத்தம் 6 கோல் மட்டுமே அடித்திருந்த ரஷ்யா, இப்போது இரண்டே போட்டியில் 8 கோல் அடித்து அசத்தியுள்ளது. 2010ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, அந்த தொடரில் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கையே 8 தான்!
* நடப்பு தொடரில் இதுவரை 5 சுய கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. 1998ல் 6 சுய கோல்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாகும். அந்த மோசமான சாதனை ரஷ்யாவில் முறியடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
* உலக கோப்பையில் கோல் அடித்த 3வது எகிப்து வீரர் என்ற பெருமை முகமது சாலாவுக்கு கிடைத்துள்ளது. 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...