×

ரொனால்டோ அசத்தலில் போர்ச்சுகல் வெற்றி : வெளியேறியது மொராக்கோ

மாஸ்கோ: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பி ப்ரிவு லீக் ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தியது. லஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், 4வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார். பதில் கோல் அடிக்க மொராகோ அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்ததால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இடைவேளையின்போது போர்ச்சுகல் 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கும் முனைப்புடன் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினாலும், தற்காப்பு வீரர்கள் கவனமாக செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடித்தனர். இதே நிலை கடைசி வரை நீடிக்க, ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.

ஸ்பெயின் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியிருந்த ரொனால்டோ, இந்த போட்டியிலு, வெற்றி கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்க, தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த மொராகோ அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது. போர்ச்சுகல் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இரான் அணியை ஜூன் 25ம் தேதி சந்திக்கிறது. அதே சமயத்தில் மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.

* மொராக்கோ அணி 52 சதவீத நேரமும், போர்ச்சுகல் 48% நேரமும் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* மொராகோ 15 ஷாட் அடித்த நிலையில், போர்ச்சுகல் 10 ஷாட் அடித்தது. இவற்றில் மொராக்கோ அணியின் 4 ஷாட்களும், போர்ச்சுகல் தரப்பில் 2 ஷாட்களும் இலக்கு நோக்கி அமைந்திருந்தன.
* மொராகோ அணிக்கு 7 கார்னர் வாய்ப்புகளும், போர்ச்சுகலுக்கு 5 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.
* வலுவான போர்ச்சுகல் அணிக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுத்த மொராக்கோ அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது.
 
2வது இடத்தில் ரொனால்டோ

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த அவர் மொத்தம் 84 கோல்களுடன் ஹங்கேரி வீரர் பெரன்ஸ் புஸ்காஸுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். நேற்று மொராக்கோ அணிக்கு எதிராக 1 கோல் போட்ட ரொனால்டோ 85 கோல்களுடன் தனித்து 2வது இடத்துக்கு முன்னேறினார். ஈரான் வீரர் அலி டயெய் (109 கோல்) முதலிடம் வகிக்கிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...