×

தனியார் மருத்துவமனையில் 11.50 லட்சம் கையாடல் செய்த விவகாரம் : வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ரவுடிகள் மூலம் மிரட்டுகின்றனர்

சென்னை: போலி பில்கள் மூலம் 11.50 லட்சத்தை கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெற கோரி 5 பெண் ஊழியர்கள், ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக ஆகாஷ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் காமராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் காமராஜ் மற்றும் அவரது மனைவி ஜெயராணி ஆகியோர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வடபழனி நூறடி சாலையில் ஆகாஷ் என்ற பெயரில் மருத்துவமனையுடன் மருந்தகமும் நடத்தி வருகிறேன். எங்கள் மருத்துவமனையிலேயே மருந்தகமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் சுழற்சி முறையில் புனிதவதி, திவ்யா, வேதவதி, சுபாஷினி, பாரதி ஆகிய 5 பெண் ஊழியர்கள் வேலை செய்தனர். கடந்த மாதம் மருத்துவமனை மருந்தகத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்தோம். அப்போது, போலி பில்கள் மூலம் 11.50 லட்சம் பணம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 பெண்களிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். அப்போது 5 பெண் ஊழியர்களும் பணத்தை கையாடல் செய்ததை ஒத்துக் கொண்டனர்.

எங்களிடம் கையாடல் செய்யப்பட்ட பணத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் நான் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் படி 5 பெண் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 5 பெண் ஊழியர்கள் ரவுடிகளுடன் எங்கள் மருத்துவமனைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை சார்பில் 5 பெண் ஊழியர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். எனவே, மருத்துவமனைக்கு வந்து மிரட்டல் விடுத்த நபர்கள் மற்றும் 11.50 லட்சம் பணம் மோசடி செய்த பெண் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது