×

சிறுவன் கொன்று புதைத்த விவகாரம் தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுப்பு

சென்னை: சுடுகாட்டில் கொன்று புதைக்கப்பட்ட 15 வயது சிறுவனின் உடல் எழும்பூர் தாசில்தார் முன்னிலையில் ேநற்று தோண்டி எடுக்கப்பட்டது. சென்னை சூளைமேடு சித்ரா அப்பார்ட்மென்ட் அருகே நடைபாதையில் வசிப்பவர் பெருமாள். இவரது மகன் ராஜேஷ் (15). இவர், பெற்றோருடன் இணைந்து அதே பகுதியில் நடைபாதையில் பழைய புத்தகங்களை விற்பனை செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி திடீரென ராஜேஷ் மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி முன்னிலையில் சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த கதிர்வேன் மகன் பரத்குமார் (19) மற்றும் 2 சிறுவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராஜேஷ் என்ற சிறுவனை எங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதால் அடித்து கொலை செய்து புதைத்ததாக சரணடைந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் சரணடைந்த 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ராஜேஷ் உடலை பெற்றோர் மற்றும் எழும்பூர் தாசில்தார் சேகர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது, உடலை பார்த்த ராஜேஷ் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுது துடித்தனர். மாயமான அன்று அணிந்து இருந்த அரைக்கால் சட்டை மற்றும் பணியன் எந்த வித சேதமும் இல்லாமல் எலும்பு கூடுடன் இருந்தது. அதை வைத்து ராஜேஷ்தான் என்று அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர்.

ேமலும், தோண்டி எடுக்கப்பட்ட உடலை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கார்த்திகாதேவி, விஷ்ணுராஜ்குமார் ஆகியோர் எலும்பு கூடுகளை ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர் சோபியா ஜோசப் எலும்புகளை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து ராஜேஷ் எலும்பு துண்டு ஒன்றை டிஎன்ஏ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அதே இடத்தில் ராஜேஷ் உடல் புதைக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை தாம்பரம் அருகே...