×

5 பெண்களிடம் அடுத்தடுத்து 44 சவரன் அபேஸ் ஆந்திரா நோக்கி காரில் பறந்த ஈரானிய கொள்ளையர்கள் கைது

சென்னை:  சென்னையில் அடுத்தடுத்து 5 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்களை ஆந்திரா வரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பில் சுந்தரகாண்டம் (60) என்பவரிடம் 13 சவரன், மாதவரம் பிரதான சாலையில் குமாரி (70) என்ற மூதாட்டியிடம் 6 சவரன், புழல் விநாயகபுரத்தில் சுதர்சனம்மாள் (71) என்பவரிடம் 7 சவரன், அண்ணாநகர் பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயா (60) என்ற மூதாட்டியிடமிருந்து 9 சவரன், மாங்காட்டைச் சேர்ந்த கவிதா (43) என்பவரிடம் 9 சவரன் தாலி செயினை ஒரே கும்பல் அடுத்தடுத்து பறித்து கொண்டு தப்பியது. இதில், அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயா என்பவர் கொள்ளையர்கள் வாகனத்தின் எண்ணையும், என்ன வாகனம் என்பதையும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தடுத்து செயின் பறித்த கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் கமிஷனர் ஜெயராம் மேற்பார்வையில், இணை கமிஷனர்  பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வாகன எண்ணை வைத்து விசாரித்தபோது, அவர்கள் திருட்டு வாகனத்தில் வந்து அதிகாலை 6 மணி முதல் 11 மணி வரை கைவரிசை காட்டியது கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரிந்தது. மேலும், கொள்ளையர்கள் கடைசியாக புழலில் வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளை மாதவரத்தில் விட்டுவிட்டு தங்களுக்குச் சொந்தமான மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட காரில் ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அதன்படி, கர்னூல் சுங்கச்சாவடியில் உள்ள போலீசாருக்கு தனிப்படை போலீசார் காரின் பதிவெண்ணை தெரிவித்து உஷார்ப்படுத்தினர். சிறிது நேரத்தில் கார் சுங்கச்சாவடிக்கு வந்தவுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர். காரில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அப்பாஸ், அலி, தவ்ஹித், நவாப் உள்ளிட்ட 5 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 5 பேரும் ஈரானியக் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

விமானத்தில் பறப்பார்கள்


பிடிபட்ட கொள்ளையர்கள் வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: பிடிபட்ட கொள்ளையர்கள் கடந்த மாதம் வழிப்பறி செய்த நகைகளை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று ரமலான் பண்டிகைக்கு நன்றாக செலவு செய்துவிட்டு, பின்னர் சொந்த காரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாதவரம் வந்து இறங்கியுள்ளனர். அங்கு பல்சர் 220 சிசி மோட்டார் பைக்கை திருடி செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டவர்களிடம் 44 சவரன் நகைகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1970களில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், ஈரான் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம், அம்பிவேலியில் குடியேறியனர். பின்னர் ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில், காரமடை, திருப்பத்தூர், மணப்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இடம் மாறினர். இவர்களது பிரதான தொழிலே வழிப்பறிதான்.  

சிபிஐ அதிகாரிகள், போலீஸார் போல் நடித்து கொள்ளையடிப்பதே இவர்கள் ஸ்டைல். இவர்கள் ஸ்டைலே விமானத்தில் பறந்து வந்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு பின்னர் ஒரு வாரம் தங்கி, வேலை முடிந்ததும், மீண்டும் விமானத்தில் பறந்து சென்று விடுவார்கள். அல்லது சொந்தமாக கார் வைத்திருப்பார்கள். காரில் வந்து வழிப்பறி செய்துவிட்டு பின்னர், காரிலேயே சொந்த ஊருக்கு சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பலமொழிகள் தெரியும். அந்த சம்பவத்தில் போலீஸார் ஈரானியக் கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அதன் பின்னர் தற்போது 5 பேர் பிடிபட்டிருக்கின்றனர். இவர்கள் கூட்டாளிகளும் பிடிபடுவார்கள். இதன் மூலம் சென்னையில் செயின் பறிப்புகள் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முதியவர் கைது