×

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் பரவுகிறது

* சேலத்தை தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களில் விவசாயிகள் கொந்தளிப்பு: கருப்பு கொடி ஏற்ற திட்டம்
* பசுமை வழிச்சாலை திட்டத்தால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
* கையகப்படுத்தப்படும் நிலங்களின்  விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

திருவண்ணாமலை: சென்னை- சேலம் 8  வழி பசுமை விரைவுச்சாலை திட்டத்துக்கு நாளுக்கு நாள் மக்களிடம் எதிர்ப்பு வலுக்கிறது. இதனால், சேலம், தர்மபுரியில் இதுவரை நடந்து வந்த போராட்டம் தற்போது திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை- சேலம் இடையே 277 கிமீ தொலைவில் புதிய 8 வழி பசுமை  விரைவுச்சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இத்திட்டத்துக்காக, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ள  நிலையில், சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பசுமை வழிச்சாலை திட்டத்தால், சேலம்,  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  ஆயிரக்கணக்கான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் பறிபோகும் ஆபத்து  ஏற்பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்களும்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதே  நேரத்தில், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசும் தீவிரமாக  ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை முடக்கும் முதல் கட்ட நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருகட்டமாக சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ், மாணவி வளர்மதி, மன்சூர் அலிகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அடக்குமுறைகளை கையாண்டாலும், போராட்டம் முன்பை விட தீவிரமடைந்துள்ளது. சேலம், தர்மபுரியைத் தவிர பசுமை வழிச்சாலை திட்டத்தினால், திருவண்ணாமலை, செங்கம்,  கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில்,  122 கிமீ தொலைவு சாலை அமைவதால், இம்மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படும்  நிலை உருவாகியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரம்  குடும்பங்களுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை  வழிச்சாலை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நேற்று திருவண்ணாமலை  புதிய பைபாஸ் சாலையில் வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா  ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு விவசாய  சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் பலராமன் ஆகியோர் நேற்று காலை  வந்தனர். அதற்கு முன்பே அங்கு குவிந்திருந்த போலீசார், இங்கு கூட்டம்  நடத்த அனுமதியில்லை, மணிலா ஆலைக்குள் யாரும் செல்லக்கூடாது என்றனர்.  அதனால், வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாய  சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பலராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  

மணிலா ஆலை உரிமையாளரை மிரட்டிய போலீசார், கூட்டம் நடத்த அனுமதித்தால் கைது  செய்வோம் என்றனர். மேலும், அந்த பகுதியில் விவசாயிகள் யாரையும்  அனுமதிக்கவில்லை. எனவே, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்க  துணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, மாநில  குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார்   முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த  விவசாயிகளை விரட்டி, விரட்டி போலீசார் கைது செய்தனர்.

அதன்படி,  திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 21 பேரை  தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இத்தனை தடைகளையும் மீறி, தொடர்ந்து  கூட்டம் நடந்தது.   மதியம் 2.30 மணியளவில் கூட்டத்தில்  பங்கேற்ற அனைவரும், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் திரண்டனர். கைது  செய்யப்பட்ட விவசாயிகள் விடுவிக்க  வலியுறுத்தி திடீர் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தை  கைவிடுமாறு ஏடிஎஸ்பி வனிதா, டிஎஸ்பிக்கள் பழனி, தர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டவிரோதமாக கைது  செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்கும் வரை மறியல் தொடரும் என்று விவசாயிகள் உறுதியாக கூறிவிட்டனர்.

பின்னர்,  சங்க நிர்வாகிகள் மட்டும் எஸ்பி பொன்னியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.  அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 23 விவசாயிகளும் மதியம் 3 மணியளவில்  விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும்  கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பும்,  பதற்றமும் ஏற்பட்டது. முன்னதாக, விவசாயிகள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
பசுமை  வழிச்சாலை திட்டத்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலங்களையும்,  வீடுகளையும் இழந்து, வீதிக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே,  தங்களுடைய எதிர்ப்பை மத்திய- மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில்,  பசுமைச் சாலையால் பாதிக்கப்படும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வீடுகள், நிலங்களில்  வரும் 26ம் தேதி கருப்பு கொடியேற்றப்படும். அதேபோல், அடுத்த மாதம் 6ம்  தேதி ஐந்து மாவட்ட தலைநகரங்களிலும் பசுமை வழிச்சாலை அமைக்கும் அரசாணையை  எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை சேலம், தர்மபுரியில் மட்டுமே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் 5 மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களில் போலீசாரும் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி விவசாயிகள் சங்க நிர்வாகி குற்றச்சாட்டு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டி: சேலம் - சென்னைக்கு செல்ல ஏற்கனவே 3 சாலை வழித்தடங்கள் உள்ளன. தற்போது அமைக்கப்படும் பசுமைச் சாலை, சேலத்திலும், திருவண்ணாமலையிலும் உள்ள இரும்பு  கனிம வளங்களை விரைவாக கொண்டுசெல்லவே பயன்படும். தமிழகத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்படுகிறது. கலந்துரையாடல் கூட்டத்துக்கு வந்தவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி, கைது செய்வது கண்டனத்துக்குரியது.  தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி)  அமல்படுத்தப்பட்டுள்ளது.

பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட  வேண்டும். விவசாயிகளின் பட்டா நிலங்களையும், அவர்கள் நீண்டகாலமாக  அனுபவத்தில் உள்ள நிலங்களையும் கையகப்படுத்தக் கூடாது. குறிப்பாக,  திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவிலான பாசன கிணறுகள் பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தை  எதிர்த்து எங்கள் அமைப்பின் சார்பில் கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஐந்து  மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து களத்தில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான...