×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரம்மோற்சவம்: செப்.13, அக்.10ம் தேதிகளில் நடக்கிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.  திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடனும், ஆகம ஆலோசகர்கள் மற்றும் தலைமை அர்ச்சகர்களுடனும் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடத்தப்பட உள்ளது.

கடந்தாண்டு பிரம்மோற்சவத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜிலென்ஸ், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பிரம்மோற்சவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால், ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணி நடக்கும்.

பிரம்மோற்சவத்தையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமி வீதி உலா நடக்கும். கருட சேவை மட்டும் இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. வீதி உலா நேரங்களின் மாற்றம் குறித்து ஆகம ஆலோசகர்கள், 3 தலைமை அர்ச்சகர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். ரூ.2.92 கோடி காணிக்கை: ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்தும், மலைப்பாதை வழியாக நடந்து வந்த பக்தர்கள், ரூ. 300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்தில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ.2.92 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...