×

புதிய கட்டணம்: பொன்மலை சந்தை வியாபாரிகள் முடிவு: ரயில்வே ஏற்குமா?

திருச்சி: திருச்சி பொன்மலையில் ரயில்வே இடத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடும். தினசரி சந்தையும் நடக்கிறது. 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. கடைகள் அமைக்க கடந்த 13 ஆண்டுகளாக கட்டணம் கிடையாது. சந்தை நடக்கும் இடத்துக்கு வரிவசூல் செய்ய தனியாருக்கு ரயில்வே திடீரென டெண்டர் விட்டது. தரைக்கடைகளுக்கு ரூ.200, தள்ளு வண்டிகளுக்கு ரூ.150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 8ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பொன்மலை சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு, அனைத்து கட்சிகள் சார்பில் கட்டண விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கட்டண உயர்வை திரும்ப கோரி 8 முதல் 10ம் தேதி வரை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கட்டணம் வசூலிப்பதை ரத்து செய் யக்கோரி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டியிடம் மனு அளிக்கப்பட்டது. கட்டணத் தொகையை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும், அதற்குள் வியாபாரிகள் ஆலோசித்து புதிய கட்டணத்தை நிர்ணயித்து தெரிவிக்க வேண்டும் என்றும் கோட்ட மேலாளர் கேட்டுக்கொண்டார். இதற்காக பொன்மலை சந்தையில் மார்க்சிஸ்ட் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அனைத்து கட்சியினர், தொழிற்சங்கத்தினர், வியாபாரிகள் என 300 பேர் நேற்று மாலை தீவிர ஆலோசனை நடத்தினர். கூட்டம் இரவு வரை நீடித்தது. தலை சுமை வியாபாரிகளுக்கு ரூ.5(பழைய கட்டணம் ரூ.20) இருசக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.10(ரூ.30), 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.15(ரூ.40), அனைத்து வகையான வண்டிகளுக்கு ரூ.20(ரூ.50), 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.30(ரூ.150), தரைக்கடை வியாபாரிகளுக்கு ரூ.20(ரூ.200),

 பிரசார வாகனங்களுக்கு ரூ.30(ரூ.200), கனரக வாகனங்களுக்கு ரூ.40(ரூ.300),  தினசரி கடைகளுக்கு ரூ.15, தினசரி 3 சக்கர வியாபாரி களுக்கு ரூ.10 என புதிய  விலை நிர்ணயம்(அடைப்புக்குறிப்புக்குள் ஏற்கனவே ரயில்வே நிர்ணயித்திருந்த கட்டணம்) செய்யப்பட்டது. வியாபாரிகள் கூறுகையில், ‘புதிய விலை நிர்ணயம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனுவாக கொடுக்கப்படும். தற்போது நிர்ணயித்த விலையை கோட்ட மேலாளர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்’ என்றனர். வங்கி மொபைல் ஏடிஎம் வாகனத்துக்கு ரூ.1000, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5, கார்களுக்கு ரூ.10 ஆகிய கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே கோட்ட மேலாளர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி...