×

சோதனைமேல் சோதனை பேட்டையில் இன்றும் மணலில் புதைந்த லாரி

பேட்டை: பேட்டையில் இன்று காலையும் குடிநீர் குழாய் மணலில் லாரி புதைந்ததால். சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என மக்கள் புலம்பத்தொடங்கி விட்டார்கள். நெல்லை பேட்டையில் அரியநாயகிபுரத்திற்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பாதி வேலை முடிந்தும் மீதி வேலை ஆமை வேகத்திலும் நடக்கிறது. பணி முடிந்த இடங்களில் குழாயின் மேல் பகுதியில் மணலை போட்டு நிரப்பி உள்ளனர். அதன் வழியாக கனரக வாகனங்கள் சென்றால் அதோ கதிதான்... புதைகுழியில் சிக்கியவர்களின் நிலை எப்படியிருக்குமோ அதே நிலைதான்.
முறைப்படி ஜல்லிபோட்டு சிமின்ட் கலவை ஊற்றி மூடியிருந்தால் பிரச்னை இல்லை.

 வெறுமன மணலை போட்டுள்ளதால் தினமும் வாகன ஓட்டிகளின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. நேற்றுமுன்தினம் காலை திருப்பணிகரிசல்குளத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு வந்த அரசு பஸ் பேட்டை ரொட்டிகடை ஸ்டாப் பகுதியில் வரும்போது குழாய் பதிக்கப்பட்டுள்ள புதை மணலில் சிக்கியது. இதனால் குழாய் உடைந்து தண்ணீர் ஆறாக ஓடியது. ஒன்றா..இரண்டா..பல மணிநேரம் குழாய் அடைப்பை சரி செய்யாததால் தண்ணீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. நேற்றுமுன்தினம் காலை 8.30 மணிக்கு உடைப்பெடுத்த குழாய் தண்ணீர் நேற்று மாலை 3 மணிக்குத்தான் சரி செய்யப்பட்டது. 30 மணி நேரம் கழித்து சரி செய்ததால் ரோடுகள் சகதிகாடாகிவிட்டது.

பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் நொந்து போய் விட்டார்கள். எப்படியோ உடைப்பு அடைக்கப்பட்டு விட்டது  என அவர்களால் நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை. காரணம் சோதனைமேல் சோதனைபோல் இன்று காலை 11.30 மணிக்கு அதிக மணல் ஏற்றிய லாரி ஒன்று இந்த வழியாக வந்தது. செக்கடி ஸ்டாப் அருகில் வரும்போது குடிநீர் குழாய் மணலில் புதைந்து விட்டது. பிறகென்ன வழக்கம்போல் அந்த வழியாக வாகனங்கள் செல்லை முடியவில்லை. பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தார். ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டது.

அவர்கள் லாரியை பல மணி நேரம் போராடி மீட்டனர். இப்படி தினமும் கனரக வாகனங்கள் சிக்குவதால். நாங்கள் எப்படித்தான் நடமாடுவது. ஒன்று குழாய் பதித்த பகுதியில் ஜல்லிபோட்டு மூடுங்கள்.இல்லாவிட்டால் ரோட்டை இழுத்து மூடுங்கள் என்று போலீசாரிடம் பெண்கள் ஆவேசமாக வாதிட்டனர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்