×

மரத்தடியில் உட்கார்ந்து படித்த போது பச்சை பாம்பின் திரவம் பட்டதால் அதிர்ச்சி : 5 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரசு பள்ளி மாணவிகள் மரத்தடியில் கல்வி பயின்றபொழுது மரத்தின் மேல் விளையாடிக் கொண்டிருந்த பச்சை  பாம்புகளில் இருந்து கசிந்த திரவம் பட்டதால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ராப்பூசல் பஞ்சாயத்து  குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் படித்துக் கொண்டிருந்தனர். அந்த மரத்தில் மூன்று பச்சை பாம்புகள் ஒன்றோடு ஒன்றாக பின்னி விளையாடி கொண்டிருந்தன.  அப்பொழுது மரத்தடியில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த விஜயக்குமார் மகள் மணிமேகலை (10), ராமன் மகள் கங்காதேவி (10) சிங்கமுத்து மகள் பாண்டிமீனாள் (10) ராசு மகள் மகேஸ்வாரி (10) முருகன் மகள் சிவஜோதி (10) ஆகிய 5 மாணவிகள் மீது அந்த பாம்பில் இருந்து கசிந்த திரவம் பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவிகளுக்கு அந்த இடத்தில் லேசாக தடித்து அலர்ஜி ஏற்பட்டு மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள் மரத்தின் மீது பார்த்த போது மூன்று 3 பச்சை பாம்புகள் இருந்துள்ளது. மேலும் பொதுமக்கள் உதவியுடன் பாம்பை அடித்து எடுத்துக்கொண்டு மாணவிகளை ஆம்பலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து மருத்துவர்கள் மாணவிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் ரத்த பரிசோதனைகளும் செய்தனர். மேலும் மாணவிகளை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர். மேலும் தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...