×

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 22ம் தேதி முதல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கவிருந்த நிலையில் நேற்று திடீரென சிபிஎஸ்இ நிர்வாகம் தேதி குறிப்பிடாமல் அதை ஒத்திவைத்துள்ளது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தான் எழுத வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்திருந்தது.  இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது. சிபிஎஸ்இ நிர்வாகத்தின் அறிவிப்பு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த நிலையில் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் நிருபர்களின் சந்திப்பில் கூறியதாவது:

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 20 பிராந்திய மொழிகளில் நடத்தப்படுவதுதான் வழக்கமான ஒன்றாகும். இதில் நீதிமன்றம் உரிய காலத்திற்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதால் தேர்வில் சில மொழிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் குறைந்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் இந்த மொழி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விவகாரத்தில் தமிழ், அசாம், குஜராத்தி, மலையாளம், பஞ்சாபி, உருது உட்பட 20 பிராந்திய மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது கடந்த 15ம் தேதியே பிறப்பிக்கப்பட்டு விட்டது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை சிபிஎஸ்இ நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்படும். அதனால் இதுகுறித்து தற்போது எந்த புதிய குழப்பமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து மத்திய ஆசியரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுதுவது தொடர்பான அனுமதி உறுதியானது. இந்த நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு வரும் 22ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாகத்தின் சில காரணங்களுக்காக விண்ணப்ப பதிவு தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் விண்ணப்பப் பதிவு குறித்த மறுதேதி அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!