×

வைகை அணையை தூர்வார கோரி வழக்கு: அரசு செயலர்களுக்கு நோட்டீஸ்

மதுரை: வைகை அணையை தூர்வார கோரிய வழக்கில் அரசு செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுைரயை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 72 அடி உயர வைகை அணை முறையாக  பராமரிக்கப்படாததால், சுமார் 20 அடிக்கு சேறு, சகதி நிறைந்துள்ளது. இதனால், நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. 5 மாவட்ட குடிநீர் தேவை வெகுவாக பாதித்துள்ளது. வைகை அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடி சென்றுள்ளது. பல பகுதிகள் பாலைவனம் போல உள்ளன. குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீர்நிலைகள் வறண்டுள்ளன. விவசாயப் பணிகள் நடக்கவில்லை. வறுமை காரணமாக விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க அரசு தவறிவிட்டது. அதே நேரம் வைகை அணையை தூர்வாரி போதுமான அளவு தண்ணீர் தேக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல.

இதுதொடர்பாக நான் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்தேன். அதில், உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால் வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரிகளும், அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் வைகை அணையை தூர்வார உத்தரவிட வேண்டும். இது தொடர்பான முந்தைய வழக்கில் சரியான தகவலை அளிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும், அபராதமும் விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, அனிதா சுமந்த் ஆகியோர் மனு குறித்து, தமிழக தலைமை செயலர், பொதுப்பணித்துறை செயலர், நீர்வள ஆதார அமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள், பெரியாறு - வைகை கோட்ட செயற்பொறியாளர், தேனி கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...