×

விவசாய ஆராய்ச்சி படிக்க விரும்பிய ஈரோடு மாணவனுக்கு குஜராத்தில் நுழைவுத்தேர்வு மையம் ஒதுக்கீடு: சென்றுவர பணமின்றி தவிப்பு

கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு வடுகனூரைச்சேர்ந்தவர் சுப்பிரமணி(52). இவரது மனைவி சாந்தி(48).  டீக்கடை நடத்தி வரும் இவர்களின் மகன் பொன்ராகுல்(17).  பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து வந்த பொன்ராகுல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதால், பிளஸ் 2வில் தாமரைப்பாளையம் தனியார் பள்ளி இவருக்கு இலவச கல்வியை வழங்கியது.  நடந்து முடிந்த பிளஸ்2 பொதுத்தேர்வில் 1200க்கு 1164 மதிப்பெண் பெற்றுள்ளார். இதையடுத்து பொன்ராகுல் விவசாயத்தில் ஆராய்ச்சி படிப்பை வெளி மாநிலத்தில் படிக்க விரும்பினார்.இதற்காக டெல்லியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்சுக்கு  விண்ணப்பித்தார். மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு உள்ளதைப்போலவே விவசாயத்தில் ஆராய்ச்சி படிப்பை படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விவசாயத்தில் ஆராய்ச்சிக்கான படிப்பை படிக்க முடியும். விண்ணப்பத்தில் தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் அமைத்துள்ள நுழைவுத்தேர்வு மையங்களில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தேர்வு மையத்தில் நுழைவுத்தேர்வு எழுத அனுமதி வழங்கி ஹால் டிக்கெட் கொடுத்துள்ளது. பண வசதியின்றி, மிகுந்த சிரமமான நிலையில் வாழ்ந்து வரும் பொன்ராகுலின் தந்தை மகனை அகமதாபாத் அனுப்ப முடியாமல் தவித்து வருகிறார். இதனால் விவசாய கல்வி ஆராய்சி படிப்பை படிப்பதற்கான நுழைவுத்தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அதிர்ச்சியிலும் தவிப்பிலும் பொன்ராகுல் ஆழ்ந்துள்ளார். நுழைவுதேர்வுக்கான மையத்தை மாநிலம் விட்டு மாநிலம் ஒதுக்கியுள்ளதால் திறமை இருந்தும் மதிப்பெண்கள் இருந்தும் பணம் இல்லாததால் ஏழை மாணவனுக்கான கல்வி உரிமை மறுக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...