×

சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிப்பு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் 750 கோடி இழப்பீடு கோரி வழக்கு

மதுரை: சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிப்பதால், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ரூ.750 கோடி இழப்பீட்டை டெபாசிட் செய்யக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், லாடனேந்தலை சேர்ந்த வக்கீல் விஜய் நிவாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. பாய்லர் வெடித்தது, அமிலம் வெளியேறியது உள்ளிட்ட பல சம்பவங்களால் ஆலைக்குள்ளும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு  சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 ஆண்டுகளில் காற்றும், நீரும் அதிகளவு மாசடைந்துள்ளது. பல பெண்களின் கர்ப்பம் கலைந்துள்ளது. ஆலையிலிருந்து கணேசபுரம், குரூஸ்புரம் மற்றும் திரேஷ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 25 கி.மீ தொலைவிற்கு நிலத்தடி நீர் மட்டம் பாதித்துள்ளது. சல்பர் டயாக்சைட் உள்ளிட்ட வேதிப்பொருட்களால் தொண்டை நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சுற்றுப்பகுதியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் பாதித்துள்ளது.

இதுதொடர்பான ஒரு வழக்கில், ஆலையால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்குவதற்காக ஆலை தரப்பில் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்ட 13 அப்பாவி மக்கள் கடந்த மே 22ல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே, ஆலையால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு மற்றும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ள மீளவிட்டான், குமாரரெட்டியாபுரம், மீனவ பகுதிகள், மடத்தூர், கோரம்பள்ளம், புதுக்கோட்டை மற்றும் ஒட்டப்பிடாரம் பகுதி பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து மீன்பிடி தொழில், ஏற்றுமதி, இறக்குமதி தொழில், போக்குவரத்து, சரக்கு சேவை பாதிப்பு போன்றவற்றால் ஒட்டுமொத்தமாக ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, போராட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடாக ஆலை தரப்பில் வழங்கவும், ஆலையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கவும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில் இழப்பீடு வழங்கவும் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு ரூ.620 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மின் இணைப்பு கோரி வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்யப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்பட்டது. தற்போது கலனில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, எந்தவித அச்சுறுத்தலுமின்றி, பாதுகாப்பான முறையில் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவை சரிசெய்வதற்காக உடனடியாக ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை எங்களது நிறுவன ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ள தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இரண்டாவது நாளாக கந்தக அமிலம் அகற்றம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கெமிக்கல் குடோனில் இருந்து ராசயன கசிவு ஏற்பட்டதால், குேடானில் இருந்த கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 4 லாரிகளில் கந்தக அமிலம் கொண்டு செல்லப்பட்டது. அளவில் குளறுபடிகள் இருப்பதாக கருதி வெளியே சென்ற 4 லாரிகளும் திரும்பி வந்தன. நேற்று மதியம் 4 டேங்கர் லாரிகளில் முழு அளவில் கந்த அமிலம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. மொத்தம் 80 மெட்ரிக் டன்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவை கோவையில் உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், மேலும் 15 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன. இங்குள்ள கந்தக அமிலம் முழுவதும் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் இரு நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஆலையினுள் பிற ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ள டேங்க்குகளும் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் அகற்றப்படும். வேறு எந்த கசிவும் தற்போது இல்லை என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு