×

துனிசியாவை துவைத்தது இங்கிலாந்து

வோல்கோகிராட்: உலக கோப்பை கால்பந்து ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை  வென்றது.வோல்கோகிராட் கால்பந்து அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் 11வது நிமிடத்திலேயே  அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். 35வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கைல் வாக்கர் செய்த தவறுக்காக துனிசியா  அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி பெர்ஜானி சாஸி துல்லியமாக கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.  இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியில் கூடுதல் முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு, துரதிர்ஷ்டவசமாக பல ஷாட்கள் கோல் ஆகாமல்  நூலிழையில் கை நழுவின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டம் முடிந்து, காயம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தை சரிக்கட்டுவதற்காக கூடுதல்  நேரம் வழங்கப்படது.91வது நிமிடத்தில் துனிசியா கோல் பகுதியை நோக்கி பறந்து வந்த பந்தை ஹாரி கேன் மின்னல் வேகத்தில் தலையால் முட்டி வலைக்குள்  திணித்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.1990ம் ஆண்டுக்கு பிறகு ஒரே உலக கோப்பை போட்டியில் 2 கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமை ஹாரி கேனுக்கு  கிடைத்துள்ளது. 1990ல் இத்தாலியில் நடந்த தொடரில் கேமரூனுக்கு எதிராக கேரி லினேகர் 2 கோல் போட்டிருந்தார்.

* கடைசியாக விளையாடிய 10 உலக கோப்பை ஆட்டங்களில் இங்கிலாந்து அணி முதல் முறையாக 2 கோல் அடித்துள்ளது. முன்னதாக, 2006ல்  ஸ்வீடனுக்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது.
* கேப்டன் ஹாரி கேன் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ந்து கோல் அடித்துள்ளார். அவர் தேசிய  அணிக்காக 25 போட்டியில் 15 கோல் போட்டுள்ளார்.
* இங்கிலாந்து அணி 61% நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது (துனிசியா 39%).
* இங்கிலாந்து வீரர்கள் 18 ஷாட் அடித்த நிலையில், துனிசியா தரப்பில் 6 ஷாட்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. இவற்றில் இங்கிலாந்தின் 8 ஷாட்கள்  இலக்கை நோக்கி துல்லியமாகப் பாய்ந்தன. துனிசியாவின் 1 ஷாட் மட்டுமே துல்லியமாக இருந்தது. அதுவும் பெனால்டி கிக் என்பது குறிப்பிடத்தக்கது.
* இங்கிலாந்து அணிக்கு 7 கார்னர் வாய்ப்புகளும், துனிசியாவுக்கு 2 கார்னரும் கிடைத்தன.
* துனிசியா வீரர்கள் 14 தவறுகள் செய்தனர். இங்கிலாந்து தரப்பில் 8 தவறுகள் செய்யப்பட்டன.
* துனிசியா அணியுடனான லீக் ஆட்டத்துக்கு சற்று முன்பாக ‘வெற்றிகரமான உலக கோப்பை தொடர் அமைய எனது வாழ்த்துக்கள்’ என்று  இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேனுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி ட்வீட் செய்திருந்தார். அதற்கேற்ப கேன் 2 கோல்  அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்ததற்கு கோஹ்லியின் அதிர்ஷ்ம் தான் காரணம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
* பிசிசிஐ செயலர் அமிதாப் சவுதாரி இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா  விளையாட உள்ள 3 டி20 போட்டிகளை பார்க்க விரும்பினால்,  அதற்கான செலவுகளை  அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  நிர்வாகக் குழு கூறியிருப்பது இரு  தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கை  மேலும் அதிகரித்துள்ளது.
* உடல்தகுதியை நிரூபிப்பதற்காக இந்திய அணி  ஆல் ரவுண்டர் ரோகித் ஷர்மாவுக்கு இன்று யோ-யோ சோதனை நடத்தப்பட உள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது. ஏற்கனவே ராயுடு, ஷமி ஆகியோர் இந்த சோதனையில் தேர்வு  பெறத் தவறியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
* இந்திய அணிக்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை.
* ஸ்பெயின் அணியுடன் நடந்த 5வது ஹாக்கி டெஸ்டில் 4-1 என்ற கோல் கணக்கில்  அபாரமாக வென்ற இந்திய மகளிர் அணி 2-2 என்ற  கணக்கில் தொடரை சமன் செய்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...