×

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை: அருண் ஜெட்லி தகவல்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் மதிப்பை பொருத்தே விலை நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையுயர்வுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், விலையுயர்வு கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் எனவும், இதனால் விலை உயர்வு கட்டுக்குள் வரும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பு இல்லை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குடிமக்கள் அனைவரும் முறையாக வரிசெலுத்தினால் பெட்ரோலிய பொருட்கள் மீதான அதிக வரிவிதிப்பை சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனைத்து தரப்பினரும் வரி செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார்.

உற்பத்தி வரியில் குறைத்தால் வருமான இழப்பு ஏற்படும் என தெரிவித்த அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முந்தைய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், கடந்த 4 ஆண்டுகளில் வரிகள் மூலம், நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். நிதியை முறையாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்தினால் தான் நுகர்வோருக்கு பலன் கிடக்கும் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...