×

தூத்துக்குடியை அச்சுறுத்தும் அமிலக்கசிவு: 2வது நாளாகியும் ஒரு சொட்டு அமிலம் கூட அகற்றப்படவில்லை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்துவரும் கந்தக அமிலத்தை 2 நாட்கள் ஆன பின்னரும் அகற்றுவதில் சிக்கில் நீடித்து வருகிறது. இதுவரை ஒரு சொட்டு அமிலம் கூட அகற்றப்படவில்லை. தூத்துக்குடியில் மூடி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனடியாக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கந்தக அமிலம் கசிவு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று காலை முதலே அந்த கந்தக அமிலத்தை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அமிலத்தை அகற்றும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்த நிலையிலும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. நேற்று இரவு வரையிலுமே ஆலையிலுருந்து ஒரு சொட்டு அமிலம் கூட வெளியேற்றப்படவில்லை. ஆலைக்கு முழு மின்சாரத்தையும் கொடுத்தால் மட்டுமே அமிலம் முழுமையாக அகற்றப்படும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என்றும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் மின்சாரம் கேட்டு ஸ்டெர்லைட் ஆலை அளித்த கோரிக்கை அரசுக்கு அனுப்பட்டு உள்ளது. மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். சுமார் 1000 மெட்ரிக் டன்களுக்கும் மேலாக கந்தக அமிலம் உள்ளதால் இப்பணி முடிய இரு நாட்கள் ஆகும் என கூறப்பட்டது குறிப்படத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...