×

கர்நாடக முதல்வர் குமாரசாமி பரபரப்பு பேட்டி காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்க முடியாது: மீண்டும் கிளம்புகிறது சர்ச்சை

புதுடெல்லி: ‘‘உச்ச நீதிமன்ற உத்தவின்படி மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் உள்ள சில கடினமான விதிகளை தளர்த்தும் வரை அதனை ஏற்க முடியாது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’’ என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி அணையில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதையடுத்து அதன் உபரி நீர், சுமார் 35 ஆயிரம் கன அடி அளவுக்கு தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றுவிட்டதால், வெறும் 500 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூ்ட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி  வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்து பேசினார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் குமாரசாமி அளித்த பேட்டி:கர்நாடகா மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அதற்கு தேவையான நிதியை வழங்கக்கோரியும், கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை முழுமையாக கர்நாடகா அரசு ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அதில் கடினமான ஒரு சில சட்ட விதிகள் உள்ளன. அதனை திருத்தம் செய்ய வேண்டும் ஒருவேளை எங்களது மாநிலத்தின் நீர் அளவு தெரியாமல் மாதத்தில் 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம் உத்தரவிட்டால் அது எதிர்க்காலத்தில் சிக்கலான ஒன்றாக அமைந்துவிடும். அதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் அளவை கணக்கிட்டு சரியான நேரத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தாமாக முன்வந்து தண்ணீர் திறந்துவிடும். மேலும் தமிழக விவசாயிகளின் நலனை கர்நாடகா எப்போதும் கருத்தில் கொண்டுள்ளது.

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் எந்தவித ஆலோசனையோ அல்லது மசோதாவோ நிறைவேற்றப்படவில்லை. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான நீர் சட்டம் 1956 விதியின் கீழ் அவ்வாறு கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஆணையம் செல்லத்தக்க ஒன்றாக இருக்கும். மேலும் கர்நாடக அரசு காவிரி ஆணையத்திற்கு எதிரானது கிடையாது. ஆனால் அதில் உள்ள சட்ட விதிகள் என்பது மாநில அதிகாரித்தில் தலையிடுவது போன்று மிகவும் கடினமாகவும், நுணுக்கமாகவும் உள்ளது. அதனை திருத்தம் செய்யும் வரை ஆணையத்தை எங்களால் ஏற்க முடியாது.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு