×

சாலை வரையறை மாற்றம் செய்து திறக்கப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலைகளை வகைபாடு மாற்றி மீண்டும் திறக்கப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி  தொடரப்பட்ட வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2016ம்  தடை விதித்தது.  இந்த உத்தரவின்  அடிப்படையில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 கடைகள் மூடப்பட்டன.பின்னர், மாநகராட்சி, நகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் கடைகளுக்கான உரிமங்கள் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவின் அடிப்படையில், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல், 1,700 டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டன.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அறிவிக்காமல்  திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் சாலைகளில் இருந்த கடைகளை திறக்க வகை செய்யும் வகையில் மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வை துறை கடந்த மே மாதம் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் 1,300 கடைகள் மீண்டும்  திறக்கப்பட்டுள்ளன.இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி வக்கீல்சமூகநீதிப் பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனு தாக்கல்  செய்தார்.அதில், மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளை வகைப்படுத்தும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு இல்லை  என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி இதே கோரிக்கையுடன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று வாதிட்டார்.  இதையடுத்து, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...