×

பலத்த காற்றால் மீனவர்களுக்கு டோக்கன் வழங்க மறுப்பு அனுமதியின்றி 800 படகுகளில் கடலுக்கு சென்றதால் பரபரப்பு

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்க  மறுத்து விட்டனர். டோக்கன் இல்லாமல் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தடைக்காலம் முடிந்த நிலையில் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கணிசமான அளவு இறால் மீன்களோடு கரை  திரும்பினர். நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற பாம்பன் மீனவர்களும் அதிகளவு மீன்பாடுகளுடன் நேற்று காலை கரை திரும்பினர். நேற்று அதிகாலை  விசைப்படகு மீனவர்கள், அனுமதி டோக்கன் பெறுவதற்காக ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் பாக் ஜலசந்தி கடல்  பகுதியில் பலத்த காற்று வீசுவதால்,  கடலுக்கு செல்ல அனுமதியில்லை என்று கூறி அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்க மறுத்து விட்டனர்.  இதனால் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

‘‘பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 50 மைல் முதல் 55 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல  வேண்டாம்,’’ என அதிகாரிகள் ெதாடர்ந்து வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்து அனுமதி டோக்கன் பெறாமலே 800க்கும் மேற்பட்ட  விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
மீனவர்கள் கூறுகையில், ‘‘இரண்டு மாத கால தடைக்காலம் முடிந்து இப்போதுதான் கடலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளோம். கடலுக்கு செல்லாவிட்டால் மீன்பாடு குறைந்து விடும். அதனால் டோக்கன் இல்லாமலே நாங்கள் கடலுக்கு புறப்படுகிறோம்,’’ என்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை