×

பிரேசிலுக்கு எதிராக டிரா செய்தது சுவிட்சர்லாந்து

ரோஸ்தோவ்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணியுடன் மோதிய சுவிஸ்  அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து அசத்தியது. ரோஸ்தோவ் கால்பந்து அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், உலக  கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டுள்ள பிரேசில் அணி சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சுவிஸ் கோல்  பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய பிரேசில் அணிக்கு, 20வது நிமிடத்தில் பிலிப் கோடின்யோ பாக்சுக்கு வெளியே இருந்து பந்தை  அற்புதமாக வலைக்குள் திணித்து 1-0 என முன்னிலை கொடுத்தார்.

இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் கடும் நெருக்கடி கொடுத்த சுவிஸ் அணிக்கு, 50வது நிமிடத்தில் கார்னர் கிக்  வாய்ப்பு கிடைத்தது. கோல் பகுதிக்கு முன்பாக பந்து பறந்து வர, பிரேசில் தற்காப்பு வீரர்களின் அரணை முறியடித்து மின்னல் வேகத்தில் தலையால்  முட்டி கோல் அடித்தார் சுவிஸ் வீரர் ஸ்டீவன் ஸூபர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேசில் வீரர்கள் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
எனினும், துடிப்புடன் செயல்பட்ட சுவிஸ் கோல் கீப்பர் எதிரணியினரின் முயற்சிகளை முறியடித்தார். பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க  மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவுடன் திருப்தி அடைந்தன. 5 முறை சாம்பியனான பிரேசில்  அணி, கடைசியாக விளையாடிய 3 உலக கோப்பை ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது (1 டிரா, 2  தோல்வி). 1978 ஜூனில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் இருந்த பிரேசில் அணி, அதன் பிறகு தற்போது தான் மோசமான  பார்மை சந்தித்துள்ளது. சுவிஸ் வீரர் வலோன் பெராமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் சுவிஸ் அணிக்காக 4வது உலக கோப்பை தொடரில்  விளையாடுகிறார்.

* பிரேசில் வீரர்கள் மொத்தம் 21 ஷாட்களை அடித்த நிலையில், சுவிஸ் தரப்பில் இருந்து 6 ஷாட்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. இவற்றில் பிரேசில்  அணியின் 5 ஷாட்கள் இலக்கை நோக்கி துல்லியமாகப் பாய்ந்த நிலையில், சுவிஸ் வீரர்கள் அடித்த 2 ஷாட்கள் மட்டுமே பிரேசில் கோல் கீப்பரை  சோதித்தன.
* பிரேசில் அணிக்கு 7 கார்னர் வாய்ப்புகளும், சுவிஸ் அணிக்கு 2 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.
* சுவிஸ் வீரர்கள் மொத்தம் 19 தவறுகள் செய்தனர் (பிரேசில் தரப்பில் 11).
* சுவிஸ் அணி கடைசியாக விளையாடிய 23 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது (16வெற்றி, 6 டிரா). 2017 அக்டோபரில்  போர்ச்சுகல் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோற்றதே கடைசியாகும்.
* சுவிஸ் கடைசியாக விளையாடிய 5 உலக கோப்பை தொடரிலும், தொடக்க லீக் ஆட்டத்தில் தோற்றதே இல்லை என்ற (2 வெற்றி, 3 டிரா)  பெருமையை தக்கவைத்துக் கொண்டது.
* பிரேசில் அணிக்காக பிலிப் கோடின்யோ அடித்துள்ள 11 கோல்களில், 5 கோல் பாக்சுக்கு வெளியே இருந்து அடிக்கப்பட்டவை ஆகும்.
* பி1966ல் இருந்து உலக கோப்பையில் பிரேசில் அணி வீரர்கள் பாக்சுக்கு வெளியே இருந்து அடித்த கோல்களின் எண்ணிக்கை 37. இந்த வகையில்  மற்ற எந்த அணியையும் விட 11 கோல் அதிகமாக அடித்து முன்னிலை வகிக்கிறது.
* சுவிஸ் அணிக்கு எதிராக எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தியும், வெற்றியை வசப்படுத்த முடியாதது பிரேசில் அணி வீரர்களை ஏமாற்றமடையச்  செய்தது.
* பிரேசில் அணி 55% நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது (சுவிஸ் 45%).

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...