×

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம்: விரைவில் விசாரணை தொடங்குகிறது

சென்னை:  டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் வழக்கின்  முடிவை எட்ட மூன்றாவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.  எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, கவர்னரிடம் மனு அளித்ததால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை  எதிர்த்து, 18 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேரவைத் தலைவர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.  அவருடன் வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், பேரவைத் தலைவர் உத்தரவு செல்லாது என்று கூறி கடந்த 14ம் தேதி மாறுபட்ட தீர்ப்பு  வழங்கினார்.  இதனால் வழக்கில் முடிவு எட்டப்படவில்லை.

 இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை முடிவு செய்ய 3வது நீதிபதி நியமிக்கப்படுவார் என்றும் அவரை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ்  நியமிப்பார் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்கத மிழ்ச்செல்வன், ‘‘நீதிமன்றத்தில்  வழக்கு இருப்பதால், காலதாமதம் ஏற்படும். இதனால் வழக்கை நடத்த எனக்கு விருப்பம் இல்லை. பேசாமல் வழக்கை வாபஸ்பெற முடிவு  செய்துள்ளேன்’’ என்று அறிவித்தார். இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த மற்ற 17 பேரும் வழக்குகளை வாபஸ் பெறுவார்கள் என்று  எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு வழக்குகளை வாபஸ்பெற்றால், 3வது நீதிபதி விசாரணை தேவையில்லாததாகவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வரை 18 பேருமே வழக்குகளை வாபஸ்  பெறவில்லை.

  இந்நிலையில், வழக்கை விசாரிக்கப் போகும் 3வது நீதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாகியது. மேலும், வழக்கை ஒரு மாதத்திற்குள்  விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் உள்ள வழக்கு ஆவணங்கள், தீர்ப்பு நகல்கள், எழுத்துப்பூர்வ வாதங்கள்  அனைத்தும் மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் அலுவலகத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக எஸ்.விமலா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை நீதிபதி குலுவாடி  ரமேஷ் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, உயர் நீதிமன்றம் தனது வழக்கு பட்டியலில் அறிவிப்பாணையாக வெளியிடும். அதன் பிறகு நீதிபதி விமலா 18 எம்எல்ஏக்கள் வழக்கை  விசாரிக்கும் தேதியை அறிவிப்பார்.

நீதிபதி விமலா, மாவட்ட நீதிபதியாக இருந்தபோது தமிழகத்தில் அமைக்கப்பட்ட மகளிர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.  குடும்ப நலம் சார்ந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பை, நாடு முழுவதும் எதிர்பார்த்துள்ள  நிலையில், அவரது நியமனம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி தீர்ப்பு வழங்கினாலும், அது தமிழக அரசியலில் பல திருப்பங்களை  ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

* எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, கவர்னரிடம் மனு அளித்ததால், டிடிவி  தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
* அதை எதிர்த்து, தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,  நீதிபதி எம்.சுந்தர் விசாரித்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்- பதிவு இலவசம்!

Tags :
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...