×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே உகந்தது: தலைமை நீதிபதி கருத்து

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிப்பதே உகந்தது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.
 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் 99 நாட்கள் ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். 100வது நாளான கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் சுமார் 20ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தடய அறிவியல் துறை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் மக்கள் அரசு கட்சியின் தலைவர் வக்கீல் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் திருமூர்த்தி ஆஜராகி, ‘இந்த படுகொலை சம்பவம் போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என்றார்.

 இதை கேட்ட தலைமை நீதிபதி, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ தான் சரியான அமைப்பு. நீங்கள் ஏன் சிபிஐ கோரவில்லை. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஜூலை 6ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்’ என்றார். இதையடுத்து வழக்கு ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டடது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மக்களவை தேர்தலில் காலை 11 மணி...