×

எண்ணூர் - மகாபலிபுரம் சுற்று வட்டச்சாலை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் : 4,797 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தகவல்

சென்னை: சென்னை சுற்று வட்டச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக 4,797 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் எண்ணூர் துறைமுகத்துடன் மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் 1,175 கோடி ரூபாய் செலவில் சுற்று வட்டச்சாலை அமைக்க தமிழக அரசானது ஆட்சிமுறை ஒப்புதல் அளித்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு பெட்டக வாகனங்கள் செல்ல உதவியாக இந்த சாலை அமைகக் திட்டமிடப்பட்டுள்ளது.     81 கிராமங்கள் வழியே அமைக்கப்பட உள்ள இந்த புதிய சுற்று வட்டச்சாலை 77 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாகவும் அமைக்கபட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71 கி.மீ. திருவள்ளூர் மாவட்டத்தில் 91 கி.மீ., என, மொத்தம் 162 கி.மீ., தூரம், இச்சாலை அமையவுள்ளது. மாமல்லபுரத்தில் துவங்கும் இந்த சாலை, சிங்க பெருமாள் கோவில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைபாக்கம், பெரியபாளையம், புதுவாயல், காட்டுப்பள்ளி வழியாக, எண்ணூர் சென்றடையும். இந்த சாலைக்காக எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை 4,797 மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும், 819 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. புதிய சாலை அமைப்பதற்காக மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை அடுத்த மாதம் 10-ம் தேதி செங்கல்பட்டிலும், 12-ம் தேதி செங்குன்றத்திலும் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவை தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு