×

பேட்டரியால் இயங்கும் அதிநவீன ஏசி பேருந்து..... கேரள அரசு அறிமுகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அரசு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 300 பேட்டரி பேருந்துகளை இயக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.  கேரள அரசு சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அம்மாநில அரசு போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பேட்டரியில் இயங்கும் நவீன பேருந்தை கேரள அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது. மாநில போக்குவரத்து அமைச்சர் டொமின் தச்சன்காரி திருவனந்தபுரத்தில் இந்த பேருந்தின் முதல் பயணத்தை இன்று தொடங்கி வைத்தார்.

அதிநவீன வசதிகள்
5 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை இயக்க முடியும். குளிர் சாதன வசதி கொண்ட இந்த பேருந்தில் 35 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள். மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி என நவீன வசதியுடன் இந்த சொகுசு பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

15 நாள் சோதனை ஓட்டம்
சோதனை ஓட்டமாக இயக்கப்படும் இந்த பேருந்து வெற்றிகரமாக இயங்கினால் மாநிலத்தில் உள்ள பிற டீசல் பேருந்துகள் மாற்றப்பட்டு பேட்டரி பேருந்தகளை பெருமளவு இயக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினங்களுக்குள் கொச்சி மற்றும் கோழிக்கோடு உள்ளியிட்ட பெரு நகரங்களிலும் இந்த சேவை நீட்டிக்கப்படும். 15 நாட்களுக்கு இந்த சோதனை ஓட்டம் தொடரும். ஏசி வால்வோ பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் இந்த பேட்டரி பேருந்திற்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கி.மீ.க்கு 1 யூனிட்
இந்த பேருந்தை 1 கிலோமீட்டர் இயக்க 1 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்தியாவில் இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 6வது மாநிலமாக கேரளாவிலும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி...