×

மெரினாவில் எந்த கட்டுமான பணிகளும் நடைபெற கூடாது... : ஜெ., நினைவிட வழக்கில் தலைமை நீதிபதி கருத்து

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை என ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். எனினும் சட்டத்திற்குட்பட்டே சில தீர்ப்புகளை வழங்க வேண்டிய தேவை உள்ளதாகவும் கூறியுள்ளார். உலகின் அழகிய கடற்கரையை சுத்தமாக பேணி பாதுகாக்க வேண்டும். மெரினாவில் எந்த கட்டுமான பணிகளும் நடைபெற கூடாது என்பதே தமது கருத்து என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். ஆனால் தம்முடைய நீதித்துறை சார்ந்த பார்வையில், சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே தலையிட முடியும் என்றார்.

இது தொடர்பாக வாதிட்ட அரசு தரப்பு விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுவதாக கூறியது. இவ்விகாரம் தெடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நினைவிடம் தொடர்பான கட்டுமான வரைபடத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நினைவிடம் தொடர்பான கட்டுமான வரைபடம் வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்துச் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. இதையடுத்து 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கத் தமிழக அரசு சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்குத் தடைவிதிக்கக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார். இந்நிலையில் வழக்கை விசாரி்த்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...