×

காவிரி ஆணையம் விவகாரம் : தொடர்ந்து முரண்டு பிடிக்கும் கர்நாடகம்

பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரியை பகிர்ந்து கொள்ளும் 4 மாநிலங்கள் சார்பில் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதில் உறுப்பினர்களாக இடம் பெறுபவர்களின் விவரங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் அறிவித்து விட்டன. ஆனால் கர்நாடகா இன்னமும் உறுப்பினர் பெயரை அறிவிக்கவில்லை. ஜூன் 12-ந்தேதிக்குள் உறுப்பினர் பெயரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதை கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து டெல்லியில் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அப்படி ஒப்புதல் பெறாமல் காவிரி ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமாகும் என்று தெரிவித்தார். இந்நிலையில் காவிரி ஆணையம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று பிரதமர் மோடி மற்றும் நிதின் கட்கரியை சந்தித்து பேசியுள்ளார்.


தமிழகத்துக்கு நீர் தருவதில் சிக்கல் இருக்காது : அமைச்சர் தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர் நியமிக்க கர்நாடகம் காலம் தாழ்த்தி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர் நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு சட்டப்படி பின்பற்றும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஆணையம் அமைப்பதில் உள்ள சிக்கலை தீர்த்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.

கர்நாடக அணைகளில் தற்போது வரை 51 டி.எம்.சி. நீர் இருப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் 6.2 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை தொடர வாய்ப்புள்ளதால் தமிழகத்துக்கு நீர் தருவதில் சிக்கல் இருக்காது எனவும் சிவகுமார் பேட்டியளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...