×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம், நிலத்தை வாடகை, குத்தகைக்கு விடாததால் 21 கோடி வருவாய் இழப்பு

சென்னை: கோயில்களுக்கு ெசாந்தமான கட்டிடங்கள், நிலங்கள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடாததால் அறநிலையத்துறைக்கு வருவாய் குறைந்து இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்தாண்டை காட்டிலும் ரூ.21 கோடி ரூபாய் வரை அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,645 கோயில்கள் உள்ளன. இதில், அதிக வருவாய் வரக்கூடிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடங்கும். இக்கோயில்களுக்கு சொந்தமான 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகள், மேலும், 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை கொண்டு தான் அறநிலையத்துறை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக கோயில்களுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகை  மற்றும் மனைகளை குத்தகைக்கு விடாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கொண்ட நிலங்கள் எந்தவித பயன்பாட்டிற்கும் விடாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் வாடகைக்கோ, குத்தகை பயன்பாட்டிற்கோ விடாமல் உள்ளது.
இதன்காரணமாக அறநிலையத்துறையின் ஆண்டு வருவாய் கடந்த 2016-17ஐ காட்டிலும் 2017-18ம் ஆண்டில் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2016-17ல் 141 கோடி வருவாய் இருந்தது. ஆனால், 2017-18ல் 120 கோடியாக வருவாய் குறைந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறநிலையத்துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.மேலும், வருவாயை பெருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: கோயில் நிலங்களை ஏலம் விடுவதற்கு ஒப்புதல் கேட்டு செயல் அலுவலர்கள் கடிதம் அனுப்பினாலும் கூட அறநிலையத்துறை தலைமையகம் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக, அந்த கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி விடுகிறது. இந்த பிரச்னையில் அறநிலையத்துறை கமிஷனர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களின் வருவாயை பெருக்கும் வகையில் அந்த நிலங்களை வாடகைக்கோ, குத்தகைக்கு விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, தான் அறநிலையத்துறைக்கு கூடுதல் வருவாய் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...