×

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் திடீர் கைது : சேலம் போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை:சேலம்-சென்னை இடையே விவசாய நிலங்களை அழித்து 8 வழி பசுமைச்சாலை அமைத்தால், எட்டு பேரையாவது வெட்டுவேன் என பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகானை சென்னையில் சேலம் போலீசார் கைது செய்தனர். சேலம்-சென்னை இடையே 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள், மலைகள், நீர்வழிப்பாதைகளை அழித்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களையும், இயற்கை வளங்களையும் அழித்து உருவாகும் இச்சாலைக்கு விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் பணியை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதனை எதிர்த்து, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 3ம் தேதி, சேலத்தில் மக்கள் குழு பராமரிக்கும் கன்னங்குறிச்சி மூக்கனேரி, அம்மாபேட்டை குமரகிரி ஏரி ஆகியவற்றை பார்வையிட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் வந்தார். ஏரிகளை பார்த்த பின் அவர், சேலம் விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் கிராமங்களான தீவட்டிப்பட்டி அருகேயுள்ள காடையாம்பட்டி பொட்டியபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி கிராம மக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, விவசாய நிலங்களை அழிப்பது தேவையற்றது எனக்கூறி விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். மேலும், சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனை மத்திய, மாநில அரசு கைவிட வேண்டும். மீறி 8 வழி சாலை அமைத்தால், நான் எட்டு பேரையாவது வெட்டுவேன் என ஆவேசமாக கூறினார். நடிகர் மன்சூர் அலிகானின் இந்த பேச்சு தொடர்பாக சேலம் மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான போலீசார், நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சின் வீடியோ, ஆடியோவை கொண்டு விசாரித்து, அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் (153), அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் பயமுறுத்துதல்(189), கொலை மிரட்டல் விடுத்தல் (506-(II) மற்றும் அரசு சொத்தை சேதப்படுத்தும் வகையில் போராட்டத்தை தூண்ட செய்தல் 7-(I) சிஎல்ஏ சட்டம் ஆகிய பிரிவில் வழக்கு பதியப்பட்டது.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்ய, சேலம் எஸ்பி ேஜார்ஜி ஜார்ஜ் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சங்கரநாராயணன், இன்ஸ்பெக்டர்கள் சம்பத், சக்கரபாணி, எஸ்ஐ பெரியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டுச் வந்தனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்று, அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், சேலம் தீவட்டிப்பட்டி ஸ்டேஷனுக்கு சாலை மார்க்கமாக அழைத்து சென்றனர். அவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் விமான நிலைய விரிவாக்கம், சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தை தூண்டும் வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். அதில், கலவரத்தை தூண்டும் வகையிலும், அரசு அலுவலர்களை கொன்று விடுவதாக மிரட்டலும் விடுத்திருந்தார். இதனால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், கலவரத்தை தூண்டும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர். நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட சம்பவம், சேலம் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரம்பு மீறி பேசியதால் மன்சூர் அலிகானுக்கு ஜெயில் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: ஜனநாயகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. “கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன்” என்று பேசுவது சரியா?. இதை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்குமா?. சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. அரசுக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது. யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும். நடிகர் மன்சூர் அலிகான் என்ன சந்திரனில் இருந்தா குதித்தார். அவரும் சராசரி மனிதன் தான். சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அது தவறு தான். வரைமுறையை தாண்டி பேசுபவர்களை அப்படியே விட்டால் அதை விட வேறு தவறு எதுவும் இல்லை. வரைமுறை மீறி பேசுபவர்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயில் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

கதறி அழுத மனைவி, குழந்தைகள்

கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறாக பேசிய வழக்கில் சேலம் போலீசார் நேற்று அதிகாலை நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து காரில் ஏற்ற முயன்ற போது மனைவி மற்றும் குழந்தைகள் மன்சூர் அலிகானை கட்டி அணைத்து கதறி அழுதனர். உடனே மன்சூர் அலிகான் தனது குழந்தைகளை கட்டி அணைத்து வரட்டுமா..... அழக்கூடாது அழக்கூடாது என்று கூறி  போலீசாரின் வாகனத்தில் ஏறி சென்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...