×

தொடர்ச்சியாக 100 டிகிரிக்கு கொளுத்தும் வெயில் அனல் காற்றை தாங்க முடியாமல் தவிக்கும் சென்னை மக்கள்

சென்னை: சென்னையில் அடுத்த 3 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மே மாதம் 24ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் முடிந்தது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்தே காணப்பட்டது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறைந்தது. ஆனாலும், சென்னை, திருச்சி, மதுரை, திருத்தணி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. இருப்பினும், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் அடிக்கடி வெப்பச்சலனத்தால் மழை பெய்வதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அதேசமயம், சென்னையில் இடைவெளி விடாமல் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. கடந்த ஒரு மாதத்தில் வெறும் 2 முறை மட்டுமே வெப்பச் சலனத்தால் மழை பெய்துள்ளது.

பிற மாவட்டங்களில் வெயில் அடித்தாலும் பலத்த காற்று வீசுவதால் மக்களுக்கு அனல் தெரியவில்லை. ஆனால் சென்னையில் கடந்த ஒரு வாரமாக மிக, மிக குறைந்த வேகத்திலேயே காற்று வீசுகிறது. இதனால் வெயில் தாக்கம், அனல் காற்றால் மக்கள் பாதிக்கின்றனர். பகல், இரவு என 24 மணி நேரமும் வீடுகளில் பேன் ஓடவிடும் நிலை தான் உள்ளது. மின்வெட்டால் கொஞ்சம் நேரம் பேன் ஓடாவிட்டாலும், அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் உடலில் வியர்வை கொட்டுகிறது.ஜூலை மாதம் நெருங்கும் நிலையிலும் ஏன் வெயில் இப்படி சிரமப்படுத்துகிறது என்று மக்கள் புலம்பி வருகின்றனர். மழை பெய்யாவிட்டாலும், தற்போதுள்ள சூழலில் வெயிலின் தாக்கம் குறைந்தாலே போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மேற்கு திசையில் இருந்து வீசும் தரை காற்று மற்றும் கடல் காற்று இரண்டும் தாமதமாக வீசுகிறது. இதனால் தான் சென்னையில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்று ஜூன் மாதத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதலாக வெயில் அடிக்கிறது. தற்போதுள்ள வானிலை நிலவரப்படி சென்னையில் அடுத்த 3 தினங்களுக்கு 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பது நீடிக்கும். அதன்பிறகு வெயில் தாக்கம் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் 103 டிகிரி கொளுத்தியது


சென்னையில் நேற்று கடந்த சில நாட்களை விட அதிகமாக வெயில் தாக்கம் காணப்பட்டது. 100 டிகிரி பதிவாகி வந்த நிலையில் நேற்று சென்னையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல் நேற்று கடலூர், நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரியும், தூத்துக்குடியில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.

ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், மேட்டூர் ஆகிய இடங்களில் வெப்பச்சலனத்தால் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அதிகபட்சம் நாகப்பட்டினத்தில் 110 மிமீ மழை பதிவானது. நெல்லை, கோவையிலும் நேற்று பருவமழை பெய்தது. வெப்பச் சலனம் காரணமாக இன்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...