×

சிவகங்கை மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் 2 மணப்பெண்கள் ஓட்டம்

தேவகோட்டை: தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண்கள் அடுத்தடுத்து திருமணத்தை நிறுத்திய சம்பவங்கள் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் சாலையில் உள்ள ஒரு தனியார்  மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்தது. தேவகோட்டையை பூர்வீகமாக கொண்ட சென்னை தி.நகர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணுக்கும், வேந்தன்பட்டியை சேர்ந்த இளைஞருக்கும்  திருமணம் நடக்க இருந்தது. இதற்காக 5 நாளுக்கு முன்னரே தடபுடலாக விருந்தும், சடங்குகளும் நடந்து வந்தது. திருமண நாளான நேற்று காலை முகூர்த்த நேரமான 10.30 மணிக்கு சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. திடீரென தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக்கூறி திருமணம் செய்துகொள்ள மறுத்து எழுந்து சென்றுவிட்டார். இதனால் மண்டபத்தில் இருந்த இருவீட்டாரும் திகைத்து நின்றனர். கலகலப்பாக இருந்த மண்டபம் மயான அமைதியானது. சிறிதுநேரத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

மற்றொரு சம்பவம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இளைஞருக்கும், மதுரை சாமநத்தத்தை சேர்ந்த பெண்ணுக்கும் 4 மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்கவிருந்தது. அதன்படி திருப்புவனம் போலீஸ் லயன் தெருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று காலை திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், திருமணம் வேண்டாம் எனக்கூறி எழுந்து விட்டார். இதனால் மண்டபமே களேபரமாகி இருவீட்டாரும் மோதி கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. தகவலறிந்த திருப்புவனம் போலீசார் பேச்சு நடத்தி மோதலை தவிர்த்தனர். பின்னர் மணமகனுக்கு அவரது தாய் மாமாவின் மகளை திருமணம் செய்து வைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை...