×

பீகாரில் நடத்திய ஆய்வில் தகவல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியது மது விலக்கு : குற்றம் குறைந்தது; பெண்களுக்கு மரியாதை கூடியது

பாட்னா: பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆண்டில் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.  குற்றங்கள் குறைந்த நிலையில், வீட்டிலும், கிராமத்திலும் பெண்களுக்கு கிடைக்கும் மரியாதை கூடியிருக்கிறது.பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரலில் பூரண மதுவிலக்கு தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக, குடிகார கணவன்மார்களால் அதிகம்  பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்களின் பெரும் முயற்சியால் அம்மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது. மதுவிலக்கு அமலாகி 2 ஆண்டுகள்  ஆகிவிட்டநிலையில், அதன்மூலம், தற்போது ஒரு நல்ல மாற்றம் வந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனமும், அரசு நிதி உதவியுடன் செயல்படும் மேம்பாட்டு மேலாண்மை நிறுவனமும் இணைந்து 5 மாவட்டங்களில் சுமார்  2,368 குடும்பத்தினரிடம் ஆய்வு நடத்தின. இதன் முடிவுகள் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:மதுவிலக்குக்குப் பிறகான, விற்பனை வரி வருவாயை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது, விலை உயர்ந்த சேலைகளின் விற்பனை 1,751  சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயர்ந்த ஆடைகளின் விற்பனை 910 சதவீதமும், உணவு விற்பனை 46 சதவீதம், பர்னிச்சர் பொருட்கள் விற்பனை  20 சதவீதம், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதே போல, தேன் விற்பனை 380 சதவீதமும், சீஸ் விற்பனை 200 சதவீதமும், தினமும் பால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து பால் விற்பனை  40 சதவீதமும், தயிர் விற்பனை 19.7 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஒரு குடும்பம் உணவிற்காக வாரத்திற்கு ரூ.1000 செலவிட்டு வந்த நிலையில்,  தற்போது வாரத்திற்கான செலவு 32 சதவீதம் உயர்ந்து, ரூ.1331 ஆக அதிகரித்துள்ளது. 19 சதவீதம் பேர் புதிய சொத்து வாங்கியுள்ளனர். 5 சதவீதம் பேர்  வீட்டை சீரமைத்துள்ளனர். மதுவிலக்குக்குப் பிறகு குடும்பத்தில் தங்களின் பேச்சுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கூடியிருப்பதாக 58 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். கிராமத்தின்  பொது விவகாரங்களிலும் தங்களின் முடிவை ஆதரிப்பதாக 22 சதவீத கிராம பெண்கள் கூறியுள்ளனர். ஆள்கடத்தல் வழக்குகள் 66.6 சதவீதமும்,  கொலை வழக்குகள் 28.3 சதவீதமும், வழிப்பறி வழக்குகள் 2.3 சதவீதமும் குறைந்திருக்கிறது.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மாநிலத்தில் 44 லட்சம் பேர் மது குடிப்பவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக மதுவுக்காக  ரூ.1000 செலவழித்து வந்தனர்.

தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாதத்திற்கு சுமார் ரூ.440 கோடியும், வருடத்திற்கு ரூ.5,280 கோடியும் சேமிக்கப்படுகிறது. இந்த தொகை  உபயோகமான மற்ற பிற செலவுகளுக்கு செலவிடப்பட்டும் சேமிக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...