×

தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஸ்டெர்லைட்டில் ரசாயன கசிவு

* கலெக்டர் உறுதி செய்ததால் மக்கள் பீதி
* ஆலையில் நிபுணர் குழு ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிந்தது. இதுகுறித்த தகவல் கலெக்டருக்கு கிடைத்ததும், துணை கலெக்டர் தலைமையில் நிபுணர் குழுவினர் நேற்று ஆலையில் திடீர் சோதனை நடத்தினர். இதனால், தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் தேதி பொதுமக்கள் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன்பின், கடந்த 28ம் தேதி ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் (16ம் தேதி) மாலை ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர், தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அரசு உத்தரவின்பேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த நிபுணர்கள் குழுவினர் நேற்று மாலை 4.10மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்றனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட துணை தீயணைப்பு அதிகாரி குமரேசன், தாசில்தார் சிவகாமசுந்தரி, டிஎஸ்பி முத்தமிழ், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் மற்றும் அதிகாரிகள் ஆலையினுள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மாலை 6.10 மணியளவில் அவர்கள் ஆய்வு பணியை முடித்து திரும்பினர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம்  ஆய்வு முடிவுகளை தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்ட தகவல் பரவியதால், தூத்துக்குடி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு இருப்பது குறித்து அங்கு பணியில் உள்ள போலீசார் மூலம் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர் ஆலையில் சீல் வைக்கப்பட்ட கேட்டிற்கு பக்கவாட்டில் உள்ள கேட் மூலம் ஆலையினுள் சென்று ஆய்வு செய்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆய்வு செய்து முடிவுகளை தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோனில் லேசான கசிவு இருப்பது தெரியவந்துள்ளது.

இது ஆபத்தானது அல்ல. பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் உடனடியாக இதனை சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலையில் மின்சார இணைப்பு இல்லாததால் இரவு நேரத்தில் ஆலைக்குள் சென்று கந்தக அமில கசிவை நிறுத்த இயலாது. எனவே இன்று (18ம் தேதி) காலை உடனடியாக கசிவை சரி செய்ய முயற்சிப்பதுடன் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கந்தக அமிலத்தை பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து இன்று நிபுணர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள குடோனிலிருந்து கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது. காலையில் இருந்து இரவுக்குள் கந்தக அமிலம் அகற்றப்பட்டு விடும். சீல் வைக்கப்பட்டுள்ள வாயில்களை திறக்காமலேயே வாகனங்கள் பக்கவாட்டு வாயில் வழியாக சென்று அகற்ற முடியும். இதனை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...