×

எடிபோ சுய கோலால் பின்னடைவு: குரோஷியாவிடம் வீழ்ந்தது நைஜீரியா

கலினின்கிராட்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், குரொஷியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது. கலினின்கிராட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், நைஜீரிய வீரர் ஒகெனகரோ எடிபோ 32வது நிமிடத்தில் பந்தை தடுக்க முயன்றபோது அவரது காலில் பட்டு சுய கோலாக அமைந்தது. இடைவேளையின்போது குரோஷியா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பெரும்பாலான நேரம் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குரோஷிய  வீரர்கள், கோல் பகுதியை நோக்கி அடித்த பல ஷாட்கள் துரதிர்ஷ்டவசமாக வெளியே  பறந்தன. நைஜீரிய அணி வீரர்களின் தாக்குதல் வியூகம் சுத்தமாக எடுபடவில்லை.

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி குரோஷியாவின் லூகா மாட்ரிக் அற்புதமாக கோல் அடித்தார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், ஆட்ட நேர முடிவில் குரோஷிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.
லூகா மாட்ரிக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

* இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால், 59வது நிமிடத்தில் தான் கோல் அடிக்கும் முனைப்புடன் கூடிய முதல் ஷாட் அடிக்கப்பட்டது. நடப்பு உலக கோப்பையில் முதல் ஷாட்டுக்கு இதுவே நீண்ட நேர காத்திருப்பாகும்.
* 2014, 2018 உலக கோப்பையில் குரோஷிய அணியின் முதல் கோல் எதிரணி வீரர் அடித்த ‘சுய கோல்’ மூலமாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது (4 ஆண்டுகளுக்கு முன் பிரேசிலின் மார்செலோவும், நேற்றைய ஆட்டத்தில் நைஜீரியாவின் எடிபோவும் குரோஷியாவுக்கு கோல் தானம் செய்தனர்).
* உலக கோப்பை தொடக்க லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி முதல் முறையாக வென்றுள்ளது.
* 2014 உலக கோப்பையின் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பிரான்சுக்கு எதிராக சுய கோல் விட்டுக் கொடுத்திருந்த நைஜீரியா, ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பையிலும் ஓன் கோல் போட்டதன் மூலமாக, உலக கோப்பை வரலாற்றின் தொடர்ச்சியாக 2 சுய கோல் போட்ட முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்