×

பிரீ கிக் வாய்ப்பில் கோலராவ் அசத்தல்: கோஸ்டா ரிகாவுக்கு எதிராக செர்பியா அபார வெற்றி

சமரா: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், செர்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. சமரா கால்பந்து அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சளைக்காமல் போராடியதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால், முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படாமல் 0-0 என சமநிலை நிலவியது. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில், செர்பிய வீரர்கள் கூடுதல் முனைப்புடன் கோஸ்டா ரிகா கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

இதன் பலனாக 56வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி செர்பிய அணி கேப்டன் அலெக்சாண்டர் கோலராவ் பிரமிக்க வைக்கும் வகையில் கோல் அடித்து அசத்தினார். பதில் கோல் அடிக்க கோஸ்டா ரிகா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 3 புள்ளிகளை பெற்றது. அந்த அணியின் செர்ஜி மிலிங்கோவிச் சாவிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். செர்பியா தனது 2வது லீக் ஆட்டத்தில் 22ம் தேதி சுவிட்சர்லாந்து அணியையும், கடைசி லீக் ஆட்டத்தில் 27ம் தேதி பிரேசில் அணியையும் சந்திக்கிறது.

* செர்பியா அணி 53 சதவீத நேரமும், கோஸ்டா ரிகா 47% நேரமும் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* இரு அணிகளுமே தலா 10 ஷாட்கள் அடித்த நிலையில், தலா 3 ஷாட்கள் மட்டுமே இலக்கை நோக்கி துல்லியமாக அமைந்திருந்தன.‘
* செர்பியாவுக்கு 5 கார்னர் வாய்ப்புகளும், கோஸ்டா ரிகாவுக்கு 4 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.
* செர்பிய வீரர்கள் 18 தவறுகள் செய்த நிலையில், கோஸ்டா ரிகா தரப்பில் 15 தவறுகள் இழைக்கப்பட்டன.
* இரு அணிகளிலும் தலா 2 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. யாரும் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படவில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED சில்லிபாயின்ட்…