×

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற புதுகை, தஞ்சை, காரைக்கால் மீனவர்கள் கரை திரும்பினர்: மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்

மணமேல்குடி: மீன்பிடி தடைகாலம் முடிந்து தமிழக மீனவர்கள் கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு சென்றனர். தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 16ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை முதல் கரை திரும்பி வருகின்றனர். மீன்பிடிக்க செல்ல செலவு செய்த தொகைக்கு கூட மீன்கள் வரத்து இல்லை என கவலை தெரிவித்தனர்.புதுக்கோட்டையில் ஜெதாபட்டினம், கோட்டைபட்டினம் மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலுக்கு சென்றனர். அவர்கள் இன்று காலை கரை திரும்பினர். மீனவர்கள் வலையில் சிறிய வகை மீன்களும், 30 கிலோ எடையுள்ள திருக்கை மீன்கள், நண்டு, இறால் மட்டுமே அதிகளவில் கிடைத்தது. பெரிய மீன்கள் சிக்கவில்லை. இதனால் வருவாய் குறைந்ததாக தெரிவித்தனர்.

காரைக்காலில் கடலுக்கு சென்ற 400 படகுகளில் 150 படகுகள் கரை திரும்பின. மீனவர்கள் வலையில் சிறிய வகையான சங்கரா, பாறை, கெழுத்தி, ஷீலா மீன்கள் தான் கிடைத்தது. பெரியளவில் மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 301 விசைப் படகுகளில் மீனவர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இன்று கரை திரும்பினர். மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இறால் மற்றும் மீன் வருவாய் கிடைக்கவில்லை.

போதுமான வருவாய் இல்லாததினால் செலவிற்கேற்ற போதுமான வருமானம் இல்லாததாலும் ஏமாற்றத்துடன் கரை திரும்பியதாக கூறினர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘‘படகு ஒன்றிற்கு 200 கிலோ வரை வருமானத்தை எதிர்பார்த்து கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு சராசரியாக 50 முதல் 100 கிலோ வரைதான் இறால் வருவாய் இருந்தது. பெரிய மீன்கள் இல்லை. மீனவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கரை திரும்பினோம். அதிலும் இறால் விலை மிகவும் குறைவாக விற்பதால் போதுமான வருவாய் இன்றி ஒரு சில படகுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டமும், மற்ற படகுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

ராமேஸ்வரம்:
தமிழக கடலில் இருந்த 60 நாள் தடைக்காலம் முடிந்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் இருந்து 1000க்கும் அதிகமான விசைப்படகுகளில் ேநற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர். பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு படகுகளுக்கு தகுந்தாற்போல் 200 கிலோ முதல் 400 கிலோ வரை இறால் மீன் பிடிபட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று காலை இறால் மீன்களுக்கு அதிகபட்சமாக ரூ.450 வரையிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கரை திரும்பிய மீனவர்கள் சிலர் கூறுகையில், ‘‘வழக்கமாக இறால் மீன்கள் கிலோ ரூ.600 வரை கொள்முதல் செய்யப்படும். ஆனால் இன்று குறைவான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால், எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை’’ என்று வருத்தம் தெரிவித்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...