‘ஏழுமலையானை தரிசிக்க 2 நாட்களாகும்’ திருப்பதியில் வதந்தியால் பக்தர்கள் தள்ளுமுள்ளு: தடுப்பு வேலிகளை தாண்டியதால் பரபரப்பு

திருமலை: ‘திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 நாட்களாகும்’ என்று வதந்தி பரவியதால், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி தரிசனத்துக்கு 22 மணிநேரம் காத்திருந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 ஆயிரத்து 783 பக்தர்கள் முடிகாணிக்கை  செலுத்தியிருந்தனர். இந்நிலையில், ‘சுவாமி தரிசனத்துக்கு 2 நாளாகும்’ என்று ஆழ்வார் தோட்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென வதந்தி பரவியது.

2 நாளானால் நாளைக்கு (இன்று) பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டுமே என்று பலர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வரிசையில் இருந்த பெண்கள், குழந்தைகள் அங்குள்ள தடுப்பு வேலியை தாண்டி வெளியேற தொடங்கினர். இதனால், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தேவஸ்தான அலுவலர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், 24 மணிநேரத்தில் தரிசனம் முடிவடைந்துவிடும் என்று பக்தர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவத்தால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: