தூத்துக்குடி போராட்டத்தில் மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறப்பட வேண்டும்: முதல்வரிடம் சரத்குமார் கோரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்தார். சரத்குமார் அளித்த கோரிக்கை மனுவில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகளின் குடும்பத்தினரையும், போராட்டத்தில் கலந்து கொண்டு, துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியிலும் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களையும் கடந்த 31.05.2018 அன்று அவர் அவர் இல்லங்களிலும், பொது மருத்துவமனையிலும் சந்தித்து, அந்த சந்திப்பின்போது நான் நேரடியாக கேட்டறிந்த பல்வேறு செய்திகளை முதல்வரிடம் எடுத்துரைத்தேன் என்று கூறினார்.

கலவரத்தைத் தூண்டும் எண்ணம் உள்ளவர் எவரும், குழந்தைகளுடனும், அன்பான குடும்பத்தினருடனும் உணவு எடுத்துக்கொண்டு சென்றிருக்க மாட்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன். மேலும் முதல்வரிடம், நான் சென்று வந்த பின்னர், என் மனதில் எழுந்த கேள்விகளை அவர் பார்வைக்கு எடுத்துச் சென்றேன். இந்த வழக்குகள் அவர்கள் எதிர்காலத்தையும் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற ஐயம் பரவலாக நிலவுகிறது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு நிம்மதி வழங்க வேண்டும்.

இந்த பயம் கலந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு, எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறந்து மனஅழுத்தம் குறைந்து மக்கள் சகஜ நிலை திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் திறக்க வாய்ப்பளிக்காமல் இருக்கும் உத்திரவாதத்தை அனைவரும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்தேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: