நீர்வளத்துறை செயலாளரை தற்காலிகத் தலைவராக நியமித்ததன் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது : ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: நீர்வளத்துறை செயலாளரை தற்காலிகத் தலைவராக நியமித்ததன் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிர்வாக அமைப்பாக  மாற்றப்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:    காவிரி மேலாண்மை  ஆணையம் முறையாக செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்திருந்தால் மத்திய நீர்வளத்துறையில் பணியாற்றும்  நீர்ப்பாசன வல்லுனர் ஒருவரை தற்காலிகத் தலைவராக நியமித்திருக்கலாம். மாறாக, நீர்வளத்துறை செயலாளரை தற்காலிகத் தலைவராக  நியமித்ததன் மூலம் அது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பதவி என்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

Advertising
Advertising

 ஒரு மாநிலத்தின் நீர்  தேவை குறித்தும், இடர்ப்பாட்டுக் காலத்தில் எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு தண்ணீரை வழங்கலாம் என்பது குறித்தும்  நீர்ப்பாசன வல்லுனர்களால் தான் தீர்மானிக்க முடியும். ஐஏஎஸ் அதிகாரிகளால் முடியாது. இதன்மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முழுக்க,  முழுக்க நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பால் மாநிலங்களின் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்து தெளிவான முடிவுகளை  எடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும் கூட,  அதன் தீர்ப்பை ஏதேனும் மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம்  என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே காவிரி மேலாண்மை ஆணையம் பல் இல்லாத அமைப்பு  என்பது தெளிவாகிவிட்டது.

 எனவே, காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி ஆணையத்தின் தலைவராக  நீர்ப்பாசன வல்லுனரை நியமித்து அதை  முழுக்க முழுக்க தொழில்நுட்ப அமைப்பாக மாற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மாநிலங்கள்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஆணையத்திற்கே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: