அமைச்சருடன் டிடிவி.தினகரன் சரமாரி மோதல் சாராய ஆலை குடும்பம் என்பதா?: ஆவேசமாக வெளிநடப்பு

சென்னை:  ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறப்பதா என்று டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியதால் அமைச்சர் தங்கமணியுடன் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஆர்.கே.நகர் டிடிவி.தினகரன் (அமமுக) எழுந்து மதுக்கடைகளை மூடுவது தொடர்பான ஒரு கேள்வியை எழுப்பி பேசினார். நான் நேற்று கேள்வி எழுப்பியபோது துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது சாராயக்கடை அதிபர், மது ஆலை குடும்பம் என அமைச்சர் யாரைக் கூறினார் என்று உடனடியாக இந்த அவையில் விளக்கம் தர வேண்டும். சபாநாயகர் தனபால்: உங்களை பற்றியோ அல்லது உங்களது பெயரை அமைச்சர் குறிப்பிட்டு பேசியிருந்தால், நான் உங்களுக்கு பேச அனுமதி கொடுக்கிறேன். ஆனால் அமைச்சர் ஒரு குடும்பம் என்றுதான் குறிப்பிட்டார். ஆதலால் இதைப்பற்றி பேச உங்களுக்கு அனுமதி தர முடியாது.

Advertising
Advertising

டிடிவி.தினகரன்: என்னை குறிப்பிட்டுதான் அமைச்சர் பேசினார். அதுபற்றி நான் பேச அனுமதிக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: எந்த ஒரு உறுப்பினரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே பேச வாய்ப்பு வழங்க முடியும். அமைச்சர் பொதுவாகத்தான் பேசினார். எனவே அனுமதி தர முடியாது.  அமைச்சர் தங்கமணி: ஜெயலலிதாவின் கொள்கைகளை ஏற்று இருந்தால் ஆலைகளை இந்நேரம் அவர்கள் மூடி இருக்கலாம். ஆனால் மது ஆலைகளை மூடாமலே ஆண்டுதோறும் வருமானத்தை பெற்று விட்டு இப்போது இங்கு வந்து மக்களை ஏமாற்ற குற்றச்சாட்டை கூறுகின்றார். இதைத் தொடர்ந்து தினகரன், அமைச்சருக்கு பதில் சொல்ல முயன்றார். ஆனால் சபாநாயகர் அவருக்கு அனுமதி தரவில்லை. அவரது மைக்கும் ஆப் செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தினகரன் பேசிக்கொண்டே இருந்தார். மைக்கில் பேசுவது மட்டுமே அவைக்குறிப்பில் ஏறும் என்று சபாநாயகர் கூறினார்.  இதை கண்டித்து, டிடிவி.தினகரன் உடனடியாக சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார். இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதலே டிடிவி.தினகரன் மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ேகாபத்துடன் முறைத்தார்

டிடிவி.தினகரன் வெளிநடப்பு செய்த போது, அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனை கேலி செய்யும் வகையில் கூச்சலிட்டனர். இதனால் கடுப்பான டிடிவி.தினகரன் இருக்கையில் இருந்து சிறிது தூரம் சென்ற அவர் மீண்டும் அவைக்குள் திரும்பி அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஒரு முறை முறைத்தார். அதை தொடர்ந்து அதுபற்றி மைக்கை பிடித்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

‘எங்களிடம் ஏன் மது வாங்க வேண்டும்?’

டி.டி.வி.தினகரன் வெளியில் அளித்த பேட்டி: டாஸ்மாக்  துறையை பார்க்கும் அமைச்சரை (தங்கமணி) டாஸ்மாக் அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது. என்னை  சாராய அதிபர் என்று  அமைச்சர் சொல்கிறார். என் குடும்பத்தினருக்கு சாராய ஆலை எதுவும் கிடையாது. எங்கள் குடும்பத்திற்கு சாராய ஆலை இருக்கிறது என்றால், அரசு ஏன் எங்களிடம்  மது வகைகளை வாங்க வேண்டும். தேர்தல்  கமிஷனில் என்னை அதிமுகவின் துணை  பொதுச்செயலாளர் என்று மனு கொடுத்தது அமைச்சர்கள்தான். என்னுடைய உறவினர் மது ஆலை வைத்திருந்தால், அது எப்படி எனக்கு சொந்தமாக முடியும்? கோயம்புத்தூர் பக்கம் சென்று  கேட்டுப்பாருங்கள், யார் பினாமி பெயரில் மது ஆலை நடத்துகிறார்கள் என்று தெரியும். அடுத்து தேர்தல் வரும்போது பார்ப்போம். சொந்த தொகுதியிலேயே அமைச்சர் தங்கமணி ஜெயிக்க முடியாது என்றார்..

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: