இயல்புநிலைக்கு திரும்பிவரும் தூத்துக்குடி....வாபஸ் பெறப்பட்டது 144 தடை உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்புவதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.  கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. கடந்த 5 நாட்களாக தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்
தூத்துக்குடியில் இன்று வழக்கம்போல் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கபடுகின்றன. நள்ளிரவு  புதுக்கோட்டை பகுதியில் மர்ம நபர்கள் பேருந்து மீது கல்வீசியதால், இரவு நேர பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ககன்தீப் சிங் பேடி பேட்டி
தூத்துக்குடியில் முழுமையாக இயல்புநிலை திரும்ப நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பி வருவதால் 144 தடையை ஆட்சியர் நீட்டிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இயல்புநிலை முழுமையாக திரும்பியவுடன் போலீசார் குறைக்கப்படுவர் என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

ரணகளமாக மாறிய தூத்துக்குடி
மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி  144 தடை உத்தரவை மீறி கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலக கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் தீவைக்கப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம் சூழ்ந்ததால், தூத்துக்குடி மாநகரமே ரணகளமாக மாறியது.

ஆட்சியர் மாற்றம்
தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் மாற்றப்பட்டனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக  நியமிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்து நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார்.  போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED அணைக்கட்டு அருகே மயிலார் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் விழா