×

சென்னை கிரைம்

அதிகாரி வீட்டில் 40 சவரன் கொள்ளை
சேலையூர் அடுத்த கவுரிவாக்கம், சந்தனம்மாள் நகர் 2வது தெருவில் வசிப்பவர் சீனிவாசன் (60), ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ70 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பாலியல் தொல்லை: வாலிபர் கைது
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கரண். இவரது மனைவி ஷர்மிளா (22). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35). கடந்த சில நாட்களாக ஷர்மிளா கடைக்கு செல்லும்போது, அவரை கார்த்திக் பின் தொடர்ந்து, ஆபாச வார்த்தை பேசி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை ஷர்மிளா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்ற கார்த்திக், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷர்மிளா கொடுத்த புகாரின்பேரில், ஆர்.கே.நகர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கார்த்திக்கை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ரூ5 லட்சம் மொய் பணம் திருட்டு
மாடம்பாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் சார்லஸ் (62). இவரது மகள் திவ்யபாலாவுக்கும், சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகனுக்கும் நேற்றிரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆல்வின், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மகள் திருமணத்துக்கு வந்த மொய் பணத்தை சரிபார்த்தார்.  அப்போது, மொய் பணம் வைக்கப்பட்ட பையில் இருந்த ₹5 லட்சம் பணம், தனியாக செலவுக்காக வைத்திருந்த ரூ80 ஆயிரம் பணம், 2 விலையுர்ந்த செல்போன்கள் ஆகியவை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
எண்ணூர், தாழங்குப்பத்தை சேர்ந்தவர் சிவகுமார் (45). காலடிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை செய்தார். நேற்று காலை திருவொற்றியூர், பட்டினத்தார் கோயில் பகுதியில் மின்தடை சரி செய்யும் பணியில் சிவகுமார் மற்றும் 3 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். சிவகுமார் டிரான்ஸ்பார்மரின் மீது ஏறிய பழுதை சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சிவகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

வாலிபருக்கு கத்திக்குத்து
மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (22). இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இரும்புலியூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு, கேக் வெட்டும்போது, இரும்புலியூர் பகுதியை சேர்ந்த உதயா, பப்லு, ராஜசேகர், விவேக் ஆகியோருக்கும், அஜித்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அஜித்தை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.

ரயில் மோதி வாலிபர் சாவு
 பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

ஐடி ஊழியரிடம் நூதன கொள்ளை
பெரும்பாக்கம், கருமாரி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. ஐடி நிறுவன ஊழியர். இந்நிலையில், லேப்டாப்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக சாலையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த எண்ணை பாலாஜி தொடர்பு கொண்டு லேப்டாப் குறைந்த விலைக்கு கிடைக்குமா என கேட்டுள்ளார். அப்போது, எதிர் முனையில் பேசிய நபர், ரூ22 ஆயிரம் பணத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் வாருங்கள் என்று கூறியுள்ளார். உடனே, பாலாஜி பணத்தை எடுத்துக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் அருகே சென்றார். அப்போது, 2 நபர்கள் வந்து பாலாஜியிடம் பணத்தை வாங்கி கொண்டு, இங்கேயே காத்திருங்கள்.. லேப்டாப்பை எடுத்து வருகிறோம்.. என்று கூறிவிட்டு தப்பிச்சென்றனர்.

லாரி மோதி குழந்தை பலி
வேளச்சேரி பெரும்பாக்கம் பசும்பொன் நகர், டாக்டர் அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் முருகன். முடிச்சூரில், அழகு நிலையம் நடத்துகிறார். இவரது மகள் தனு (4). நேற்று காலை தனுஸ்ரீ தனது பாட்டி சுசீலாவுடன் அதே பகுதியிலுள்ள கடைக்கு சென்றாள். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றதும், அடுக்குமாடி குடியிருப்பில் லாரி ஒன்று தண்ணீர் இறக்கிக்கொண்டு இருந்தது. அப்போது, டிரைவர் பின்புறம் இயக்கியதால் லாரி சக்கரத்தில் தனு சிக்கி உயிரிழந்தாள். இதுதொடர்பாக, சின்ன சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் திருட்டு
பாடி கோல்டன் காலனியை சேர்ந்தவர் அதியமான் (50). கஸ்டம்ஸ் அதிகாரி. கடந்த 20ம் தேதி அதியமான் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருச்சி சென்றுவிட்டு, நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 5 சவரன் நகை, 2 வெள்ளி குத்துவிளக்குகளை கொள்ளை போனது தெரிந்தது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...