×

தமிழகத்தில் நவீன உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை : ஜப்பான் ஆர்வம்: அமைச்சர் தகவல்

சென்னை : அதிநவீன உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்க ஜப்பான் குழுவினர் ஆர்வமாக இருப்பதாக அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் நகர்ப் புறங்களில் உள்ள அரசு மருத்துவனைகளின் உட்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ1634 கோடி நிதி உதவியினை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை வழங்க முன் வந்தது. இதனை தொடர்ந்து ஜைகா குழுவினர் தமிழக மருத்துவத் துறையினருக்கு ஜப்பான் மருத்துவமனைகளின் சேவை மற்றும் மேலாண்மை குறித்து மேலும் தெரிந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை இணைச் செயலாளர் கிரண்குராலா, ஆகியோர் ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர்.

பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்னை திரும்பினர். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: ஜப்பான் நாட்டில் உள்ள ஜைகா தலைமையிடத்தில் ஜப்பான் நாட்டின் சுகாதாரத்துறை திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஜப்பான் நாட்டில் ெதாற்றா நோய்கள் ஏற்படும் போது எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஜைகா அமைப்பின் முதுநிலை ஆலோசகருடன் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதி நவீன மருத்துவ உபகரணங்களான ஆஞ்சியோகிராபி, மொபைல் எக்ஸ்ரே கருவிகள் உற்பத்தி செய்யும் மிகப் பிரபலமான ஜப்பான் நாட்டின் ஷிமாட்ஷூ நிறுவனம், கொனக்கேவில் உள்ள மருத்துவ மனைகளை சுத்தம் செய்யும் பணிகள் என்.சி.ஜி.எம் அவசர மருத்துவ சேவைப்பிரிவு, தொற்றா நோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான பரிசோதனை மையம், டோக்கியோ ஷிபாவில் உள்ள ஜப்பான் செஞ்சிலுவை ஆஷிககா மருத்துவமனை மேலாண்மை மருத்துவ மனைகளின் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள், முதியோர் கவனிப்புபிரிவு, தொற்றா நோய் தடுப்பு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டனர்.

மேலும் ஜப்பான் குழுவினருடன் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடி திட்டங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் செய்யப்படும் உயர்தர சிகிச்சை குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது. குறிப்பாக இரண்டு கைகளை இழந்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழக அரசுக்கு மத்திய அரசால் விருது வழங்கப்பட்டதை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஜப்பான் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் அதிக நவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொடங்குவதற்கும், அதிக அளவில் முதலீடு செய்வதற்கும் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இது தமிழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...